உண்மையைப் போன்ற மயக்கத்தைத் தரும் படங்களாலும் காணொளிகளாலும் பலர் ஏமாற்றப்படுகின்றனர். இல்லாத ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளித் தயாரிப்புகள் ஆங்கிலத்தில் ‘டீப்ஃபேக்’ (Deepfake) என்று அழைக்கப்படுகின்றன.
உண்மையான காணொளிக்கும் வன்போலிக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை எளிதில் கண்டிபிடித்துவிடலாம் எனப் பலருக்குத் தோன்றலாம். ஆனால் சிங்கப்பூரில் உள்ள நால்வரில் ஒருவரால் மட்டுமே இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அடையாளம் காண முடியும் என்று சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பு கருத்தாய்வு வழியாகக் கண்டறிந்தது.
15 வயதுக்கும் அதிகமான ஏறத்தாழ 1,050 பேரிடம் கடந்த ஆண்டு அக்டோபரில் கருத்தாய்வு நடத்தப்பட்டது. அவர்களிடம் இணையப் பாதுகாப்பு, திறன்பேசி பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு நிர்வாக முறைகளைத் தழுவுவது போன்றவை குறித்து கேட்கப்பட்டன. அதில் சிங்கப்பூரின் பெரும்பாலான மக்களால் வன்போலிகளைக் கண்டுபிடிக்க இயலாததைக் கருத்தாய்வு குறிப்பிட்டது.
அதன் தொடர்பிலான கண்ணோட்டத்தைப் பகிர்ந்துகொண்ட பாதுகாப்பு நிபுணர் ரஸ்வானா பேகம், பல்வேறு நிலைகளில் பரந்த கல்விமுறைக்கான தேவையைக் குறிப்பிட்டார்.
நடைமுறை குறிப்புகள்
முகக்கூறுகளை முதலில் ஆராய வேண்டும் என்று இணைப் பேராசிரியர் ரஸ்வானா தெரிவித்தார்.
“செயற்கையான கண் சிமிட்டல், சீரற்ற ஒளித்தன்மை, பொருத்தமற்ற வாயசைவு. இவை யாவும் ஏமாற்று வேலைக்கான அறிகுறி,” என்றார் அவர்.
சொற்களுக்குப் பதிலாக காணொளிகளையும் படங்களையும் ‘ரிவர்ஸ் இமேஜ்’ எனப்படும் உள்ளீடுகளைச் செய்து எங்கிருந்து அந்தக் காணொளிகள் வந்தன என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
அந்தப் படங்களும் காணொளிகளும் நம்பகமான ஒளிவழியிலிருந்து வருகின்றனவா என்பதைப் பார்க்கவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
விழிப்புடன் இருக்கத் [Ϟ]தேவைப்படும் தனிப்பட்ட பழக்கங்கள்
மோசடிகள் வழக்கமாகவே ஒருவரை அவசரமான முடிவுகளை எடுக்கத் தூண்டும். அத்தகைய நெருக்குதல்களுக்கு ஆளாக வேண்டாம். அவசரமான முடிவுகளை எடுப்பதற்கு முன் ஒருவர் நமக்குத் தெரிந்தவரா என்பதை உறுதி செய்யும்படி இணைப் பேராசிரியர் ரஸ்வானா குறிப்பிட்டார்.
“திறன்பேசிகளிலும் கணினிகளிலும் உங்கள் மறைச்சொற்களை அவ்வப்போது மாற்ற வேண்டும். பிறர் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வலுவான மறைச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சந்தேகத்திற்குரியவர்கள் தொடர்புகொண்டால் தகவல் தொழில்நுட்பர்களையோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளையோ நாடும்படி இணைப் பேராசிரியர் ரஸ்வானா அறிவுறுத்துகிறார்.
கண்டுபிடிக்க உதவும் கருவிகள்
‘டீப்வேர் ஸ்கேனர்’, ‘மைக்ரோசாஃப்ட் வீடியோ ஆத்தென்டிகேட்டர்’ போன்ற மென்பொருள்கள், காணொளிகளில் உள்ள வன்போலி மாற்றங்களைக் கண்டுபிடிக்க உதவும் என்று பேராசிரியர் ரஸ்வானா குறிப்பிட்டார்.
‘டிரென்ட் மைக்ரோ செக்’ என்ற கருவி மூலமாக மோசடிகள், போலிச் செய்திகள் உள்ளிட்டவற்றைப் பயனீட்டாளர்கள் கூர்ந்து ஆராயும்படியும் பேராசிரியர் ரஸ்வானா குறிப்பிட்டார்.
போலி இணைய முகவரிகளில் எழுத்துப் பிழைகளோ வழக்கத்திற்கு மாறான முகவரி விவரங்களோ இருக்கின்றதா என்பதையும் ஆராய வேண்டும்.

