பெக்காசி: ஜமாஆ இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பின் முன்னாள் மூத்த தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8ஆம் தேதி) இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள பெக்காசி என்ற துணை நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்கள் தங்கள் முன்னாள் சக உறுப்பினர்களை அதிகாரிகளிடம் சரணடைந்து இந்தோனீசியாவின் அமைதி, பொருளியல் வளர்ச்சிக்குப் பங்காற்றுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர் என்று செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
அந்தக் கூட்டத்தில் காணொளி வாயிலாக கூடியிருந்த கிட்டத்தட்ட 400 பேருக்கு முன்னால் அபு ருஸ்டான் என்ற 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் ஜமா இஸ்லாமியா தலைவர் உரையாற்றினார். அந்த உரையில் அவர்,” அதிகாரிகளிடம் சரணடையுங்கள், உங்களிடம் ஆயுதங்கள் இருந்தால், அவற்றையும் அதிகாரிகளிடம் ஒப்படையுங்கள், உங்களை சிறைக்காவலில் வைக்கமாட்டார்கள்,” என்று கூறியதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முன்னாள் ஜமாஆ இஸ்லாமியா உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றுசேர்வதைத் தடுப்பது, அல்லது அவர்கள் மற்ற உதிரி பயங்கரவாத அமைப்புகளுடன் சேராமல் இருப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அவர் மேற்சொன்ன வேண்டுகோளை விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு பாலி தீவு குண்டுவெடிப்புக்கு காரணமான ஜமா இஸ்லாமியா அமைப்பை திரு அபு ருஸ்டான் ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெக்காசி நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தைப் போல் இதற்கு முன்னர் யோக்யக்கர்த்தா, மேற்கு இந்தோனீசியத் தீவான சுமத்தராவில் உள்ள ஜாம்பி நகர், மேற்கு நுசாவில் மாநிலத் தலைநகர் மத்தாரம் ஆகிய இடங்களிலும் கூட்டங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டங்கள் யாவும் இந்தோனீசியாவின் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறைப் பிரிவு எண் 88ன் ஏற்பாட்டில் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8ஆம் தேதி) அன்று கருத்துரைத்த இந்தோனீசியக் காவல்துறை சரணடையும் முன்னாள் ஜமா இஸலாமியா உறுப்பினர்கள் மீது அவர்களின் செயல்பாட்டுக்கு ஏற்றாற்போல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது. எனினும், அவர்கள் சரணடைந்தது கருத்தில்கொள்ளப்படும் என்றது.
திரு அபு ருஸ்டான் 2004ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டுவரை ஜமாஆ இஸ்லாமியா அமைப்பின் தலைவராக பொறுப்பு வகித்தார். தலைமுறை தலைமுறையாக வந்த தவறான போதனைகளின் விளைவாக தமது அமைப்பின் செயல்பாடுகள் இருந்ததாக தெரிவித்தார்.

