வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய அரசாங்கம் கள்ளக் குடியேறிகளுக்கு அடைக்கலம் தரும் நகரங்கள் கொண்ட மாநிலங்களுக்கான நிதியைப் பிப்ரவரி மாதத்திலிருந்து ரத்துசெய்யும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மினசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபொலிஸ் நகரில் நடைபெற்ற கலவரத்தை அடுத்து ஜனநாயகக் கட்சிக்கு உட்பட்ட நகரங்களைத் திரு டிரம்ப் பெரும்பாலும் குறிவைத்து அவ்வாறு கூறியதாகக் கருதப்படுகிறது.
ஒரு வாரத்திற்குமுன் அமெரிக்கக் குடிமகளான 37 வயது ரெனீ கூட் என்பவரை அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்றதை அடுத்து மினியாபொலிசின் கலவரம் தீவிரமடைந்தது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மினியாபொலிஸ் மேயர் ஜேக்கப் ஃபிரேயின் மறுப்பையும் மீறி டிரம்ப் நிர்வாகம் 2,000க்கும் அதிகமான மத்திய அதிகாரிகளை மினியாபொலிசுக்கு அனுப்பியது.
வெவ்வேறு சமயங்களில் கார்களின் கண்ணாடிகளை உடைத்து பொதுமக்களை வாகனங்களுக்குள்ளிருந்து அதிகாரிகள் வெளியே இழுப்பதைக் காணொளிகள் காட்டுகின்றன.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது ரசாயன தெளிப்பான்களைப் பயன்படுத்தும் அதிகாரிகள் கையெறிக் குண்டுகளையும் அவர்கள்மீது வீசியதாகவும் கூறப்படுகிறது.
கள்ளக் குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்த அமெரிக்கக் குடிமக்களையும் குடிநுழைவு அதிகாரிகள் கைதுசெய்தனர்.


