ஜோகூர்பாரு ரயில் திட்டத்தில் மீண்டும் தாமதம்

ஜோகூர்பாரு ரயில் திட்டத்தில் மீண்டும் தாமதம்

1 mins read
f137fcf0-57bc-4e49-a1ff-ae178991410f
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரயில் திட்டம் பற்றி 2011ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்:

மலேசியாவின் ஜோகூர்பாரு-கெமாஸ் ரயில் திட்டத்தில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மலேசியா-தாய்லாந்து எல்லையில் உள்ள பாடங் புசாரில் ஏற்கெனவே உள்ள ரயில் பாதையை படிப்படியாக விரிவுபடுத்த முன்னதாகத் திட்டமிடப்பட்டது. ஆனால் கெமாஸ் வழியாக தெற்கு நோக்கிச் செல்லும் பாதையில் ஜோகூரில் உள்ள சிகாமட் மாவட்டத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

குளுவாங், கூலாய் உள்ளிட்ட தெற்குக் கோடியில் உள்ள முக்கிய மாவட்டங்கள் நெடுகில் 11 புதிய ரயில் நிலையங்களில் சிகாமட் முதலாவது ரயில் நிலையமாக உள்ளது.

கெமாஸ் முதல் சிகாமட் வரையிலான 26 கிலோ மீட்டர் தொலைவிலான மின்சார ரயில் சேவை அக்டோபரில் தொடங்குவதாக இருந்தது. முன்னதாக இந்தச் சேவை ஜூலையில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் புதிய ரயில் சேவை இரண்டாவது முறையாக தாமதமாகியுள்ளது.

இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால், இது கெமாஸ்-ஜோகூர் பாரு இடையிலான முதல் பகுதியாக இருக்கும். இதன் மதிப்பு 9.5 பில்லியன் ரிங்கிட்டாகும் (S$2.8 பில்லியன்).

அண்மைய தாமதம், ரயில் பாதையில் மின்விநியோகப் பிரச்சினையால் ஏற்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மூலம் அறியப்படுகிறது.

இதற்கிடையே இந்தத் திட்டத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர், ரயிலின் மின்சார விநியோகத்தை பரிசோதிக்கும் இறுதிக் கட்டத்தில் குழு ஈடுபட்டு வருவதாகவும் இதனால் அக்டோபர் காலக்கெடு தவறவிட்டதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்