பெட்டாலிங் ஜெயா: அதிகாரத்துவ விநியோகச் செயலிகள் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவதால் பாதிக்கப்படும் விநியோக ஊழியர்கள் சிலர், இணையத்தில் விளம்பரப்படுத்தப்படும் கவர்ச்சிகரமான பகுதிநேர வேலைகளை நம்பிச் சென்று, சட்டவிரோத கடன்முதலைக் கும்பல்களின் வலையில் சிக்கிக்கொள்கின்றனர்.
அண்மையில் மலேசியா-சிங்கப்பூர்க் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 35 பேர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து, இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“இணையத்தில் ‘எளிய விநியோகப் பணிகளுக்கு’ உடனே அதிகப் பணம் தருவதாகக் கூறி வெளியாகும் விளம்பரங்களால் விநியோக ஊழியர்கள் எளிதில் கவரப்படுகின்றனர். ‘டெலிகிராம்’ போன்ற சமூக ஊடகங்களில் வரும் இத்தகைய பகுதிநேர வேலை விளம்பரங்களை ‘சாதாரண விநியோகப் பணி’ என்று நம்பி பலர் ஏமாறி விடுகின்றனர்.
“உண்மையில் கடன்முதலைகள் அவர்களின் பணத்தேவையைப் பயன்படுத்தி, எல்லை தாண்டி சட்டவிரோதமாகக் கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்கு அவர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றனர்,” என்று மலேசியத் தன்னுரிமைத் தொழிலர்கள் சங்கத்தின் தலைவர் ஹாரிஸ் ஃபடில்லா அர்ஷியாத் விளக்கமாகக் கூறினார்.
விநியோக ஊழியர்கள் முறையான சரிபார்ப்பு, பரிவர்த்தனைப் பதிவுகளைக் கொண்ட அதிகாரத்துவச் செயலிகள் மூலமாக மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதிகப் பணம் தருவதாகக் கூறி, முன்பின் தெரியாதோரிடமிருந்து வரும் எளிய வேலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கடன்முதலைகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறி விநியோக ஊழியர்களிடமிருந்து இதுவரை தங்களது சங்கத்திற்கு புகார்கள் ஏதும் வரவில்லை என்றாலும், பாதிக்கப்படுவோர்க்கு உதவத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
“சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு இயங்கும் கடன்முதலைக் கும்பல்களுக்கு உதவியாகச் செயல்பட்டதாக உள்ளூர் உணவு விநியோக ஊழியர்கள் உள்ளிட்ட சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று காவல்துறைத் தலைமை ஆய்வாளர் முகம்மது காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.
டெலிகிராம் குழுக்கள் வழியாக வேலைக்கு அமர்த்தப்படும் இந்த விநியோக ஊழியர்களுக்கு, ஒரு விநியோகத்திற்குக் கிட்டத்தட்ட $100 வரை பணம் தருவதாக ஆசை காட்டப்பட்டது என்று முன்னதாகச் செய்தி வெளியானது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அவர்கள் சேர்ப்பிக்க வேண்டிய பொட்டலங்கள் அனைத்தும் ‘ஆச்சரியப் பரிசுகள்’ என்று கூறி ஏமாற்றப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

