பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் தொடரும் கடுமையான வெப்பத்தால் குளிரூட்டிகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. அதன் விளைவாக, அவற்றைப் பழுதுபார்ப்பதற்கான தேவை கூடியுள்ளது.
வெப்பத்தையும் அதிகரிக்கும் மின்சாரக் கட்டணங்களையும் சமாளிக்க ஒருசில குடும்பங்கள் சூரியசக்தித் தகடுகளைப் பொருத்துவது குறித்தும் யோசிக்கின்றன.
வேறுசிலர் எரிசக்தியைச் சேமிக்க உதவும் குளிரூட்டிகளைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
மலேசியாவில் வெப்பம் வழக்கத்தைவிட அதிகமாகச் சுட்டெரிக்கிறது. பல்வேறு இடங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசிலிருந்து 37 டிகிரி செல்சியசுக்கு இடைப்பட்டிருக்கிறது.
குளிரூட்டிகளை முழு வேகத்தில் வைத்தும்கூட இரவு நேரங்களில் தூங்குவதற்குச் சிரமமாக உள்ளது என்று சிலர் கூறினர்.
குளிரூட்டிகளைப் பலரும் பயன்படுத்துவதால் அவற்றைப் பழுதுபார்க்கும் சேவைக்கான முன்பதிவுகள் கணிசமாக அதிகரித்திருப்பதாக நிறுவனங்கள் தெரிவித்தன.
ஒவ்வொரு நாளும் குளிரூட்டிகளைப் பழுதுபார்க்கும்படி 10க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாக அவை குறிப்பிட்டன.

