சோல்: வடகொரியாவில் தனியார் கல்விக்கு அதிகாரபூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளபோதும், அங்குள்ள துணைப்பாடச் சந்தை விரிவடைந்து வருகிறது. ஆங்கிலம் கற்பதில் குறிப்பிட்ட கவனம் செலுத்தப்படுவதாக தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சு நடத்திய கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்தது.
2000ஆம் ஆண்டுக்கு முன்னர் வடகொரியாவிலிருந்து தப்பிச் சென்றவர்களில் 3.2 விழுக்காட்டினர் மட்டுமே தனியார் வகுப்புகளில் சேர்ந்துகொண்டனர்.
2011ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்கொரியாவுக்குத் தப்பிச்சென்றவர்களில் தனியார் கல்வி மேற்கொண்டோரின் விகிதம் கூடியது.
2011ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடையிலும், 2016ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடையிலும் வடகொரியாவிலிருந்து தப்பிச் சென்றவர்களில் துணைப்பாடக் கல்வி பெற்றவர்களின் விகிதம் முறையே 13.2 விழுக்காடாகவும் 14.1 விழுக்காடாகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டுக்குள் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறி தென்கொரியாவில் தங்கிய 6,348 வடகொரியர்களிடம் அமைச்சு கருத்தாய்வை மேற்கொண்டது.
இந்நிலையில், அதிகமான மாணவர்கள் தனியார் ஆங்கில வகுப்புகளில் சேர்வதாக அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
2006ஆம் ஆண்டுக்கும் 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தனியார் ஆங்கில வகுப்புகளில் சேர்ந்தோரின் விகிதம் 12.5 விழுக்காட்டுக்கு அதிகரித்ததாகவும், 2016ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடையே அந்த விகிதம் 27.7 விழுக்காட்டுக்குக் கூடியதாகவும் கருத்தாய்வில் தெரியவந்தது.

