இஸ்தான்புல்: பில்லியன்கணக்கில் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகர மேயருக்கு 2,000 ஆண்டுகளுக்குமேல் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.
துருக்கி அதிபர் தயிப் எர்துவானின் முதன்மை எதிரியாகக் கருதப்படுபவர் மேயர் எக்ரம் இமமோஹ்லு. அவர் தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் அடிப்படையிலானவை எனக் கூறி, அவற்றை மறுத்துவருகிறார்.
ஆனால், அரசாங்கத்திற்குப் பேரிழப்பை ஏற்படுத்திய கும்பலில் இமமோஹ்லுவும் ஒருவர் என்று இஸ்தான்புல் தலைமை வழக்கறிஞர் அகின் குர்லெக் சாடியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது குற்றப்பத்திரிகை குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதில் இமமோஹ்லு உள்ளிட்ட 402 சந்தேகப் பேர்வழிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் ஒரு குற்றக் கும்பலாகச் செயல்பட்டு, ஊழல், லஞ்சம், மோசடி உள்ளிட்ட குற்றங்களை மேற்கொண்டதாகவும் திரு குர்லெக் விளக்கினார்.
அந்தக் குற்றக் கும்பல், பத்தாண்டுக் காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு 160 பில்லியன் லிரா (S$3.8 பில்லியன்) இழப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த 4,000 பக்கக் குற்றப்பத்திரிகையில் இமமோஹ்லுதான் அந்தக் குற்றக் கும்பலைத் தோற்றுவித்து, அதன் தலைவராகச் செயல்பட்டுவந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்தே இமமோஹ்லு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இஸ்தான்புல் தலைமை வழக்கறிஞரை இழிவுபடுத்தி, மிரட்டியதற்காகவும் கடந்த ஜூலையில் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

