17 தொகுதிகளில் களமிறங்கும் ஜனநாயகச் செயல் கட்சி

சூடுபிடிக்கும் ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்

17 தொகுதிகளில் களமிறங்கும் ஜனநாயகச் செயல் கட்சி

படம்: பெரித்தா ஹரியான்

07 Jun 2026 - 5:43 pm

2 mins read

கோலாலம்பூர்: ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி 17 இடங்​களில் போட்டியிடவுள்ளதாக அதன் தலைமைச் செயலாளரும் மலேசியப் போக்குவரத்து அமைச்சருமான ஆண்டனி லோக் அறிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் 14 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி, இம்முறை கூடுதல் இடங்களில் களம் இறங்குகிறது. 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற 10 தொகுதிகளையும் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் அதே வேளையில், தோல்வியடைந்த நான்கு தொகுதிகள் மற்றும் இதுவரை போட்டியிடாத மூன்று புதிய தொகுதிகள் என மொத்தம் 17 இடங்களில் கட்சி போட்டியிடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மற்றொரு தொகுதிக்கான இடப் பங்கீடு குறித்து கெஅடிலான் மற்றும் அமானா கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜோகூர் மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் ஜனநாயகச் செயல் கட்சி தற்போதும் வலிமைமிக்க கட்சியாகத் திகழ்கிறது. இதற்கிடையே, முன்னாள் ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மெரினா இப்ராகிம் சம்பந்தப்பட்ட அண்மைய சர்ச்சை, மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பாதிக்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் லோக் மறுப்பு தெரிவித்தார்.

ஜனநாயகச் செயல் கட்சி 60 ஆண்டுகாலப் பாரம்பரியம் மிக்கது என்றும் எந்தவொரு தனிநபரும் கட்சியைவிட பெரியவர் அல்லர் என்றும் அவர் கூறினார். தலைவர்கள் வருவதும் போவதும் இயல்பு என்றாலும் கட்சி என்றும் நிலைத்திருக்கும் என அவர் உறுதியளித்தார்.

ஜனநாயகச் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தங்களின் தனிப்பட்ட செல்வாக்கால் பதவியில் இல்லை என்றும் கட்சியின் பலத்தாலேயே பதவியில் இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் லோக் சுட்டினார்.

இருப்பினும், மெரினாவின் விலகல் மலாய் வாக்காளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனநாயகச் செயல் கட்சியில் மலாய் அரசியல்வாதிகளுக்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லை என்ற கருத்து முன்பு மேலோங்கி இருந்தது.

அந்த எண்ணம் மலாய் வாக்காளர்களிடையே மீண்டும் தலைதூக்கக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஜோகூர்தேர்தல்