நெகிரி செம்பிலானில் 20 தொகுதிகளில் வெற்றிபெற பக்கத்தான் ஹரப்பான் இலக்கு

நெகிரி செம்பிலானில் 20 தொகுதிகளில் வெற்றிபெற பக்கத்தான் ஹரப்பான் இலக்கு

படம்: பெர்னாமா

08 Jun 2026 - 7:01 pm

2 mins read

கோலாலம்பூர்: நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றிபெறும் இலக்கை பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வைத்திருப்பதாக அந்தக் கூட்டணியில் உள்ள ஜனநாயகச் செயல் கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 36 தொகுதிகளில் 20 இடங்களில் பக்கத்தான் ஹரப்பான் வென்றதை நினைவூட்டிய ஜனநாயகச் செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக், அதேபோன்ற வெற்றியைக் கூட்டணி பெற தமது கட்சி பாடுபடும் என்றார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடைபெற்ற கட்சியின் சிறப்புக் குழுக் கூட்டத்தில் திங்கட்கிழமை (ஜூன் 8) பங்கேற்ற பின்னர் அவர் ‘சினார் ஹரியான்’ ஊடகத்திடம் பேசினார்.

தங்களது இலக்கை புரிந்துகொண்டு இந்த மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சிபுரிய மக்கள் பக்கத்தான் ஹரப்பானை ஆதரிப்பர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கலைக்கப்பட்ட சட்டமன்றத்தில் ஜனநாயகச் செயல் கட்சி தற்போது தன்வசம் இருந்த 11 தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ளும் என்றும் அதற்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் திரு லோக் கூறினார்.

போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிபெற முழுமனத்தோடு கட்சி பணியாற்றும் என்றும் அவர் சொன்னார்.

நெகிரி செம்பிலானில் பக்கத்தான் ஹரப்பான் - தேசிய முன்னணி (பிஎன்) கூட்டணி ஆட்சி நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் தேசிய முன்னணியின் 14 அம்னோ உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கியதைத் தொடர்ந்து சிறுபான்மை அரசாங்கம் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்தது.

இந்நிலையில், பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 5) அந்த மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. ஜூலை மாதம் அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாசட்டமன்றத் தேர்தல் 2026தேர்தல்