வாஷிங்டன்: அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக ஈரான் போர் தொடர்பான கேள்விகளை எதிர்கொண்டுள்ளார்.
ஈரானுக்கு எதிராக அதிகப் பொருட்செலவு பிடிக்கும் போரை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் டிரம்ப் நிர்வாகம் தொடுத்தது. அதுகுறித்து ஜனநாயகக் கட்சியினர் கடுமையான கேள்விகளை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 29) முன்வைத்தனர்.
ஈரானியப் போரால் வாஷிங்டனுக்கு இதுவரை 25 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகியிருக்கிறது. ஆயுதப் படையை மேற்பார்வையிடும் மக்களவைக் குழுவிடம் தற்காப்பு அமைச்சு சமர்ப்பித்த தரவுகளில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான ராணுவச் செலவினப் பரிந்துரை குறித்த விவாதம் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு வழிவிட்டது. அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு ராணுவச் செலவினமாக $1.5 டிரில்லியன் டாலர் முன்மொழியப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியினர் ராணுவச் செலவின் விவரங்களில் கவனம் செலுத்தினர். ஈரானுக்கு எதிரான போருக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
ஈரானியப் போரால் அதிகரித்துவரும் செலவு குறித்து அமைச்சர் ஹெக்செத்தையும் கூட்டுப் படைத் தளபதி ஜெனரல் டான் கெய்னையும் ஜனநாயகக் கட்சியினர் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தனர். அமெரிக்காவின் ஆயுதத் தளவாடங்கள் வெகுவாகக் குறைந்துவருவது, ஈரானியப் பள்ளியொன்றில் குழந்தைகளைக் கொன்றுகுவித்த குண்டுவீச்சுத் தாக்குதல் முதலியவை குறித்தும் ஜனநாயகக் கட்சியினர் வினாக்களை எழுப்பினர்.
அத்தகைய குறைகூறல்களை நிராகரித்த திரு ஹெக்செத், அவை வெறும் அரசியல் என்றார்.

