சோல்: 2020ஆம் ஆண்டில் இரு கொரியாக்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த அமைக்கப்பட்ட அலுவலகத்தை வடகொரியா தகர்த்தது.
அந்நடவடிக்கைக்காகத் தென்கொரியாவிற்குக் கிட்டத்தட்ட 41.4 மில்லியன் வெள்ளி (44.6 பில்லியன் வோன்) இழப்பீடு வழங்குமாறு வடகொரியாவிற்குச் சோல் நீதிமன்றம் புதன்கிழமை (செப்டம்பர் 16) உத்தரவு பிறப்பித்தது.
மேற்குறிப்பிட்ட தகவல்களை யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பு அலுவலகத் தகர்ப்பு தொடர்பாக, தென்கொரியா வடகொரியாவிடமிருந்து இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்திருப்பது இதுவே முதன்முறை.
தென்கொரிய நிறுவனங்கள் வடகொரிய ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிவந்த கேசோங் தொழிற்பேட்டையில் இந்த அலுவலகக் கட்டடம் அமைந்திருந்தது. அந்தத் தொழிற்பேட்டை இப்போது முடக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவைச் சேர்ந்த ஆர்வலர்கள் எல்லையைக் கடந்து வடகொரிய எதிர்ப்புத் துண்டுப் பிரசுரங்களை ஏந்திச் செல்லும் பலூன்களை அனுப்பியதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.
அதனைத் தொடர்ந்து, அந்த அலுவலகக் கட்டடத்தை 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வடகொரியா தகர்த்தது.
2018ஆம் ஆண்டு செப்டம்பரில் அந்த அலுவலகம் திறக்கப்பட்டது.
அப்போதைய தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உடன் தனது மூன்றாவது உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பியோங்யாங் செல்வதற்குமுன் அக்கட்டடம் திறக்கப்பட்டது.
இரு தரப்பிலிருந்தும் தரப்புக்கு 20 அதிகாரிகள் வரை அங்குப் பணியாற்றி வந்தனர்.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக 2020ஆம் ஆண்டு ஜனவரியில் அதன் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
