தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுரபாயாவில் காவல்துறையுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்

2 mins read
6bf1eb0c-f8a8-404a-a204-7dce508cd37f
ஆர்ப்பாட்டக்காரர்கள் ராணுவ சட்டத்துக்கு எதிரான பதாகைகளை ஏந்தி, அதை எதிர்த்து முழக்கமிட்டதுடன் அரசாங்கக் கட்டடத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினரை நோக்கி கற்கள், பெட்ரோல் குண்டுகள் போன்றவற்றை எறிந்தனர். - படம்: ஏஎஃப்பி

சுரபயா: சர்ச்சைக்குரிய ராணுவச் சட்டத்தை இந்தோனீசியா அண்மையில் நடைமுறைப்படுத்தியது.

அதன்படி ஆட்சி அதிகாரத்தில் இந்தோனீசிய ராணுவத்துக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.

இந்தோனீசியாவை இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்த முன்னாள் அதிபர் சுகார்த்தோவை இப்புதிய சட்டம் ஞாபகப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

இந்த நாட்டின் ஜனநாயக முறையை சீர்குலைக்கும் நடவடிக்கை என்று அதிருப்திக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், புதிய சட்டத்தை எதிர்த்து இந்தோனீசியாவின் சுரபாயா நகரில் திங்கட்கிழமை (மார்ச் 24) வன்முறை வெடித்தது.

காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கறுப்பு ஆடை அணிந்த ஏறத்தாழ 1,000 மாணவர்களும் ஆர்வலர்களும் புதிய சட்டத்துக்கு எதிராகக் களம் இறங்கினர்.

கிழக்கு ஜாவா அரசாங்கக் கட்டத்துக்கு முன் அவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ராணுவ சட்டத்துக்கு எதிரான பதாகைகளை ஏந்தி, அதை எதிர்த்து முழக்கமிட்டதுடன் அரசாங்கக் கட்டடத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினரை நோக்கி கற்கள், பெட்ரோல் குண்டுகள் போன்றவற்றை எறிந்தனர்.

இந்தோனீசிய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் நோக்கில் அவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்தனர்.

25 பேர் கைது செய்யப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர் ஃபட்குல் கொயிர், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

காவல்துறையினர் பிடித்துச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலருக்குக் காயம் ஏற்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

இதுகுறித்து இந்தோனீசியக் காவல்துறை கருத்துரைக்கவில்லை.

புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதும் இந்தோனீசியாவில் உள்ள பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

கடந்த வாரம் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைய முயன்றனர்.

அப்போது அவர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன் அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்தனர்.

குறிப்புச் சொற்கள்