கோலாலம்பூர்: மலேசியாவில் இந்த ஆண்டு டெங்கி பாதிப்புகளின் எண்ணிக்கையும் அந்நோய் காரணமான மரணங்களும் கணிசமாக அதிகரித்துள்ளன. இருப்பினும், டெங்கி பாதிப்பு தற்போதைக்குக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக மலேசியாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2026ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வரை மலேசியாவில் 38,854 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், 29.1 விழுக்காடு கூடுதலாகும்.
அதே வேளையில், டெங்கி மரணங்களின் எண்ணிக்கை 18லிருந்து 30 ஆக (66.7 விழுக்காடு) அதிகரித்துள்ளது. டெங்கி கிருமிவகை உருமாற்றம் (DENV-2லிருந்து DENV-3 ஆக மாறியது), தீவிரமடைந்து வரும் நகரமயமாதல், பருவநிலை மாற்றங்கள், கொசுக்கள் பெருகும் இடங்கள், மக்களின் நடமாட்டம் அதிகரிப்பு ஆகியவையே இதற்குக் காரணங்கள் எனச் சுகாதார அமைச்சு விளக்கியுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் சில மாநிலங்களில் உள்ள உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் தளங்களே கொசுக்கள் பெருகுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சின் செய்தித் தொடர்பாளர், நிலைமையைக் கண்காணிக்கத் தேவையான அவசரகாலக் குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனைச் சமாளிக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பகுதிகளில் ரசாயனப் புகையூட்டுதல், சிறப்புப் பூச்சிகொல்லித் திரவம் தெளிப்பு போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பருவநிலை மற்றும் தரவுத் தொகுப்பு ஆகியவற்றைக் கொண்டு பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் முன்கூட்டியே கண்டறியும் நவீன தொழில்நுட்பக் கண்காணிப்பு முறையும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
தென்கிழக்காசிய வட்டாரத்தில் டெங்கி சவாலாக விளங்குவதால், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய அண்டை நாடுகளுடன் மலேசியா தொடர்ந்து தரவுகளைப் பகிர்ந்து வருகிறது.
டெங்கி ஒழிப்பு என்பது அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மட்டுமே சாத்தியமாகாது என்று வலியுறுத்திய சுகாதார அமைச்சு, பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தண்ணீர் தேங்கும் இடங்களை வாரம் ஒருமுறைச் சரிபார்த்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவக் கவனிப்பை நாடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

