ஜோகூரில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கிச் சம்பவங்கள்

ஜோகூரில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கிச் சம்பவங்கள்

2 mins read
80de658e-3dff-4d51-a9f2-7541982f5d14
ஜோகூரில் இதுவரை 9,954 டெங்கி பாதிப்புகள் பதிவாகியுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் டெங்கிச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்த ஆண்டின் 34வது வார நோய்த்தொற்று நிலவரப்படி, ஜோகூரில் இதுவரை 9,954 டெங்கி பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 4,304 பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் அது 131.3 விழுக்காடு அதிகமாகும்.

இந்த மொத்தப் பாதிப்புகளில், 4,520 சம்பவங்கள் நோய்த்தொற்று பரவிய பகுதிகளிலிருந்தும், 5,434 சம்பவங்கள் நோய்த்தொற்று இல்லாத பகுதிகளிலிருந்தும் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதார, சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.

34வது வாரத்தில் மட்டும் மொத்தம் 664 டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். அதற்கு முந்தைய வாரம் 651  சம்பவங்கள் பதிவாகின.

34வது வாரத்தில் பதிவான மொத்த டெங்கி சம்பவங்களில், 308 பாதிப்புகள் நோய்த்தொற்று பரவிய பகுதிகளிலிருந்தும், 356 பாதிப்புகள் நோய்த்தொற்று பரவாத பகுதிகளிலிருந்தும் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக ஜோகூர் பாருவில் 495 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக லிங் கூறினார். அதனைத் தொடர்ந்து கூலாய் (120), பத்து பஹாட் (19), சிகாமட் (9), கோத்தா திங்கி (7), மூவார், பொந்தியான் ஆகிய பகுதிகளில் தலா நான்கு பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

இதற்கிடையே, இந்த ஆண்டின் 33வது வாரம் வரை டெங்கி காரணமாக மொத்தம் 13 மரணங்கள் பதிவாகியுள்ளன. 

2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் எட்டு மரணங்கள் பதிவாகின.  

இந்த ஆண்டு முழுவதும் ஜோகூரில், டெங்கி எதிர்ப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 1.87 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3,745 அபராத அழைப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 80.2 விழுக்காடு அபராதங்கள் செலுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர் பாருடெங்கிமலேசியா