தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் 11,822 டெங்கி நோயாளிகள்

1 mins read
eb2cfbc7-2064-4428-8f5b-bf1420b663b1
அக்டோபர் 20 முதல் 26 வரை ஜோகூரில் புதிதாக 153 பேருக்க டெங்கி பரவியது. - கோப்புப் படம்: ஊடகம்

ஜோகூர் பாரு: ஜோகூரில் டெங்கி தொற்றின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 36.1 விழுக்காடு அதிகரித்ததாக ஜோகூர் மாநில சுகாதார, சுற்றுப்புறக் குழுவின் தலைவர் லிங் தியன் சூன் தெரிவித்து உள்ளார்.

அக்டோபர் 20 முதல் 26 வரையிலான 43வது தொற்று வாரத்தில் மாநிலம் முழுவதும் டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,822 ஆக அதிகரித்தது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 8,684 ஆக இருந்தது.

மேலும், அந்த ஒரு வாரத்தில் மட்டும் 153 பேருக்கு புதிதாக டெங்கி தொற்றியது. அதற்கு முந்திய வாரத்தில் (அக்டோபர் 13 முதல் 19 வரை) அந்த எண்ணிக்கை 189 ஆக இருந்தது.

ஆக, புதிய வாரத்தில் டெங்கித் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 19% சரிந்துள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள 11,822 டெங்கி நோயாளிகளில் 4,885 பேர் (41.3%) தொற்றுப் பரவல் வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள்.

எஞ்சிய 6,937 (58.7%) பேர் டெங்கி பரவாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று திரு லிங் விவரித்தார்.

குறிப்பாக, அக்டோபர் 26ல் முடிவடைந்த வாரத்தில் மாநிலத்திலேயே தலைநகர் ஜோகூர் பாருவில்தான் அதிகமானோர், அதாவது 95 பேருக்கு டெங்கி பரவியது.

இது மாநிலம் முழுவதும் அந்த வாரத்தில் பதிவான எண்ணிக்கையில் 62.1 விழுக்காடு.

குறிப்புச் சொற்கள்