சிரம்பான்: டெங்கித் தடுப்பூசியை மலேசியாவின் தேசிய நோய் எதிர்ப்புத் திட்டத்தில் இணைப்பது குறித்து, அந்நாட்டின் சுகாதார அமைச்சு இன்னும் விரிவான ஆய்வுகளையும் மதிப்பீடுகளையும் மேற்கொண்டு வருவதாகச் மலேசிய சுகாதார அமைச்சர் சுல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கித் தடுப்பூசியின் அதிக விலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆய்வுகளில் செலவு-பயன் ஆய்வும் உள்ளடங்கியுள்ளது என்று அமைச்சர் சுல்கிஃப்லி கூறினார்.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) நெகிரி செம்பிலான் பல் மருத்துவ நிபுணர் மையத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சுல்கிஃப்லி பேசினார்.
“ஒரு வகை தடுப்பூசி, தேசிய மருந்தியல் ஒழுங்குமுறை அமைப்பின் அனுமதியைப் பெற்றுப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது தனியார் மருத்துவ வசதிகளில் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. தற்போது ஜப்பானைச் சேர்ந்த டெங்கித் தடுப்பூசியின் செலவு-பயன் குறித்த ஆய்வை நடத்தி வருகிறோம். ஒரு தடுப்பூசியைத் தேசிய நோய் எதிர்ப்புத் திட்டத்தின் அங்கமாக மாற்றுவது எளிதான காரியமல்ல. அதை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். ஒரு முடிவுக்கு வந்ததும் அதுபற்றி முறைப்படி அறிவிப்போம்,” என்று அவர் விளக்கமளித்தார்.
2026ஆம் ஆண்டின் 33ஆவது நோய் பரவல் கண்காணிப்பு வாரம் வரை (ஆகஸ்ட் 22 வரை) நாடு முழுவதும் 61,000க்கும் மேற்பட்ட டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் சுல்கிஃப்லி, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 60.8 விழுக்காடு அதிகம் என்றும், இதுவரை 58 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.
இதன் காரணமாக, மலேசிய சுகாதார அமைச்சு டெங்கி அவசரகாலக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதோடு, குறிப்பாகக் கோலாலம்பூர், சிலாங்கூர் ஆகிய பகுதிகளிலுள்ள நோய்ப் பரவல் மையங்களுக்குப் மருத்துவப் பணியாளர்களை அனுப்பியுள்ளது.
மேலும் உயிரியல் கட்டுப்பாட்டு முறையான ‘வோல்பாக்கியா’ நுண்ணுயிரிகள் செலுத்தப்பட்ட கொசுக்களைப் பயன்படுத்தும் திட்டத்தையும் விரிவுபடுத்தி வருகிறது. டெங்கியை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்கு உள்ளாட்சி மன்றங்கள், தொடர்புடைய அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் குடியிருப்புப் பகுதிகளும் வளாகங்களும் ஏடீஸ் கொசுக்கள் பெருகும் இடங்களாக மாறாமல் இருப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் சுல்கிஃப்லி கேட்டுக்கொண்டார்.


