மியூனிக்: கிரீன்லாந்திற்கு அமெரிக்கா தரும் கடும் நெருக்கடி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார் டென்மார்க் பிரதமர் மெட்டி ஃபிரடெரிக்சன்.
மியூனிக் நகரில் நடைபெற்றுவரும் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற அவரிடம் கிரீன்லாந்த் விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
டிரம்பின் ஆசை மாறவில்லை:
அது குறித்து பதிலளித்த திருவாட்டி ஃபிரடெரிக்சன், ‘‘அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் இன்னும் குறியாக உள்ளார். அவரது விருப்பம் அப்படியே நீடிக்கிறது. இது குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தார்
தற்போது அச்சுறுத்தல்களைப் பற்றி மக்கள் பேசுவதாகக் குறிப்பிட்ட டென்மார்க் பிரதமர், ‘‘கிரீன்லாந்து மக்கள் இதற்கு முன்பு யாராலும் இப்படி அச்சுறுத்தப்பட்டதில்லை. எனவே தற்போது தரப்படும் இந்த அழுத்தமும் நெருக்கடியும் ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று தெரிவித்தார்.
தமது உரையின்போது, டென்மார்க் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகக் கூறிய திருவாட்டி ஃபிரடெரிக்சன், ஆனால் “பிற நாடுகளின் இறையாண்மை, வட்டார ஒற்றுமை ஆகியவற்றிற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். இவற்றில் எப்போதும் சமரசம் செய்து கொள்ள முடியாது” என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த அம்சத்தை டென்மார்க் கவனத்துடன் கையாளும். இதில் சமரசம் செய்யாது என்று திட்டவட்டமாகக் கூறிய பிரதமர், ‘‘அமெரிக்காவுடன் 1951ஆம் ஆண்டு கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது உட்பட, விவாதிக்கப்பட வேண்டிய பிற விஷயங்கள் உள்ளன.
‘‘அனைவரும் இந்த விவகாரம் முடிந்துவிட்டது என்று நினைக்கின்றனர். ஆனால் கிரீன்லாந்தை தன்வசப்படுத்திட முயற்சிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவின் விருப்பம் முடிவுக்கு வந்துவிட்டதாக நாங்கள் கருதவில்லை. இது பற்றி விவாதிக்க அமெரிக்கா-டென்மார்க்-கிரீன்லாந்து பிரதிநிதிகளை உள்ளடக்கிய பணிக்குழு உள்ளது.
‘‘அவ்வகையில் இந்த இடருக்கு சரியான திசையில் தீர்வைக் காண முயன்று வருகிறோம். ஆனால் நிச்சயமாக இதனைக் கடக்க முடியாத சில அபாயகரமான சிவப்புக் கோடுகள் உள்ளன, என்பதையும் மறுப்பதற்கில்லை,’’ என்று மேலும் விவரித்தார் திருவாட்டி ஃபிரடெரிக்சன்.
தொடர்புடைய செய்திகள்
கிரீன்லாந்து குறித்த டிரம்பின் திட்டங்கள் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளன.

