ஜப்பானியத் திருவிழாவில் மிதவையின் அடியில் சிக்கித் துணை மேயர் மரணம்

ஜப்பானியத் திருவிழாவில் மிதவையின் அடியில் சிக்கித் துணை மேயர் மரணம்

கோப்புப் படம்: சைஜோ சிட்டி

19 Oct 2026 - 6:46 pm

1 mins read

தோக்கியோ: ஜப்பானின் மேற்குப் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்டத் திருவிழாவின்போது மிதவையின் கீழே சிக்குண்டு துணை மேயர் ஒருவர் உயிரிழந்தார்.

எஹிமே வட்டாரத்தில் உள்ள சைஜோ நகரத்தின் துணை மேயர் அக்கிஹிரோ நபே உயிரிழந்ததாக நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை (அக்டோபர் 19) தெரிவித்தனர். தனித்தனி பாரம்பரியத் திருவிழாக்களில் வேறு இருவர் மாண்டதாகக் கூறப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அக்டோபர் 17ஆம் தேதி மற்றவர்களோடு சேர்ந்து பிரம்மாண்டமான மிதவையைச் சுமந்து சென்றபோது, அதன் அடியில் சிக்கிக்கொண்டதாக அதிகாரிகள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், பின்னர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக உள்ளூர்க் காவல்துறையின் துணை இயக்குநர் மக்கோத்தோ ஹகியாமா கூறினார்.

11 மிதவைகள் அருகருகே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கிட்டத்தட்ட மூன்று டன் வரையிலான எடை, நபே மீது விழுந்து நசுக்கியிருக்கக்கூடும் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

உள்ளூர் வழிபாட்டுத்தலங்கள் ஆண்டுதோறும் அழகான, ஆடம்பரமான சைஜோ திருவிழாவுக்கு ஏற்பாடு செய்கின்றன. இதில் மலர்கள், பறவைகள், போர் வீரர்களைச் சித்திரிக்கும் வகையில் செதுக்கப்பட்ட மிதவைகளின் ஊர்வலம் முக்கிய அம்சமாக இருக்கும் என்று நகரம் அதன் இணையத்தளத்தில் விளக்குகிறது.

இந்தப் பாரம்பரியம் ஜப்பானின் எடோ காலத்திற்குப் (1603 முதல் 1868 வரை) பிந்தையது என்றும் தானியங்களின் அமோக விளைச்சலுக்குத் தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இது நடத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்