கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள ரெடாங், பெர்ஹெந்தியான், தியோமான் உள்ளிட்ட 6 பிரபலத் தீவுகளில் கடல் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளதால், வெளுத்துப்போகும் அல்லது அழிந்துபோகும் பவளப்பாறைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மலேசியாவின் கடல்சார் பூங்காக்களில் உள்ள 32 தீவுகளில் மீன்வளத்துறை மேற்கொண்ட கண்காணிப்பில், கடும் சுற்றுச்சூழல் அழுத்தம் காரணமாக 6 தீவுகளில் பவளப்பாறைகளின் நிலை மோசமடைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக வேளாண், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமது சாபு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
திரங்கானுவில் உள்ள ரெடாங், பெர்ஹெந்தியான், கப்பாஸ், தெங்கோல், பாகாங்கில் உள்ள தியோமான், கெடாவில் உள்ள பாயார் ஆகிய ஆறு தீவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
“கடல் மேற்பரப்பு வெப்பநிலை 32 டிகிரி செல்சியசுக்கும் 35 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்ட நிலையை எட்டியுள்ளதால், வெளுத்துப்போய் அழிந்துள்ள பவளப்பாறைகளின் எண்ணிக்கை கூடியுள்ளது,” என்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதிலில் அவர் தெரிவித்தார்.
பவளப்பாறைகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு முக்கிய வசிப்பிடமாக விளங்கி, மீன்வளங்களுக்கு ஆதரவளிப்பதோடு கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பாக வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் உதவுகின்றன என்று திரு முகமது கூறினார்.
அதோடு, பவளப்பாறைகள் மீது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் முயற்சிகள் உட்பட, 2024 முதல் 2030 வரையிலான மீன்வளத்துறைக்கான பருவநிலை நடவடிக்கைத் திட்டத்தை அமைச்சு செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
