கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலை இடம் மாற்றுவதற்கான செலவை ஏற்றுக்கொள்ள அந்த ஆலயம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இடம் மாற்றம் குறித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலய நிர்வாகக் குழுவுடன் தாங்கள் கலந்து பேசிவருவதாக ஜேக்கல் டிரேடிங் சென்டரியான் பர்ஹாட் எனும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தியதென ஃபிரீ மலேசியா டுடே ஊடகம் தெரிவித்ததாக மலாய் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
“கோயிலுக்கு உதவும் வகையில், அதை இடம் மாற்றுவதற்கான செலவை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராய் இருக்கிறோம்,” என்று ஜேக்கல் டிரேடிங் நிறுவனத்தின் சட்ட, வர்த்தகத் தொடர்புப் பிரிவுத் தலைவரான அய்மான் டஸுக்கி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிலத்தை 2012ஆம் ஆண்டு தாங்கள் வாங்கியதிலிருந்தே ஆலய நிர்வாகத்துடன் தங்கள் நிறுவனம் நல்லுறவை வைத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலுக்கான புதிய இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் நகர நிர்வாகம் (DBKL) முன்னதாக அறிவித்திருந்தது. கோயிலை இடம் மாற்றும் பணிகள் நிறைவடையும் வரை அதை இடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டா என்று அது கூறியிருந்தது.