ஹனோய்: வியட்னாமில் வைர மோசடிக் கும்பல் பற்றிய விவரம் வெளியாகியதால் மக்கள் மட்டுமல்லாமல் வைர வியாபாரிகளும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெரிய மோசடியில் அந்நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய வைரத்தின் மதிப்பு தெரியாமல் கவலை அடைந்துள்ளனர். மற்றொருபுறம் வைர வியாபாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் அஞ்சுகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஹாங்காங் வழியாக கைப்பெட்டிகள், காலணிகள், ஆடைகளில் மறைத்து கடத்திக்கொண்டு வரப்பட்ட 30,000க்கும் மேற்பட்ட வைரக்கற்களில் அசல் சான்றிதழ் (ஜிஐஏ) அழிக்கப்பட்டு பொய்யான தரத்தை மிகைப்படுத்திக் காட்டும் சான்றிதழ் வழங்கப்பட்டதாக வியட்னாமியக் காவல்துறை தெரிவித்தது.
இதன் மூலம் அதிக விலைக்கு வைரக்கற்கள் விற்கப்பட்டுள்ளன.
வியட்னாமியச் சந்தையில் இத்தகைய வைரங்கள் எந்த அளவுக்குப் பரவியுள்ளன என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், 12க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
ஹோ சி மின் நகரில் வைர மோதிரம் வாங்கிய ஆடை விற்பனையாளரான தான் ஹாங் என்பவர், “தான் வாங்கிய வைரம் குறித்து உண்மையில் மிகவும் கவலையடைந்துள்ளேன்,” என்றார்.
இவர் வாங்கிய வைரக்கல், தற்போது விசாரணை வளையத்தில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான பிஎன்ஜே லேபாரட்டரி மூலம் தரம் பிரிக்கப்பட்டதாகும்.
எப்படியாவது இந்த வைரத்தை விற்று, பணத்தைத் திரும்பப் பெற்றுவிட வேண்டும் என அவர் முயற்சி செய்தார். ஆனால் அவர் வாங்கிய கடை மூடப்பட்டிருந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
வியட்னாமில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக ‘மீண்டும் வாங்கும்’ திட்டங்களை நகைக் கடைகள் அறிவிப்பது வழக்கம். இது, எதிர்காலத்தில் தங்களது நகைகளை மீண்டும் விற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதோடு நகைகளை மாற்றவோ அல்லது விற்கவோ விரும்பும்போது அதே கடைக்கு மீண்டும் அவர்களை வரவழைக்க ஊக்குவிக்கிறது.
ஒரு குற்றவியல் விசாரணையாகத் தொடங்கிய இந்த விவகாரம், தற்போது வியட்னாமின் வைர வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.
நாட்டின் மிகவும் புகழ்பெற்ற இரண்டு நகைக்கடைகள் இதில் சிக்கியதையடுத்து வைர வியாபாரத்துக்குக் கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனமான ‘ஃபூ நுவான் ஜூவல்லரி’ (பிஎன்ஜே), தனது வைரச் சான்றிதழ் துணை நிறுவனத்தின் முன்னாள் தலைவரைக் காவல்துறை கைது செய்த போதிலும், இந்த முறைகேடான வைரங்கள் எதுவும் தங்களது கடைகளில் விற்கப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

