டீசல் விலை அதிகரிப்பு: ஐரோப்பிய நாடுகள் அவசரக் கூட்டம்

டீசல் விலை அதிகரிப்பு: ஐரோப்பிய நாடுகள் அவசரக் கூட்டம்

படம்: ஏஎஃப்பி

02 Oct 2026 - 7:00 pm

2 mins read

பிரசல்ஸ்: டீசல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் இருப்பில் உள்ள டீசலை உடனடியாக விடுவிக்குமாறு தனது ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கு மறுநாளே, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) இதுகுறித்து விவாதிக்க ஐரோப்பிய நாடுகள் அவசரக் கூட்டத்தை நடத்துகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கும் ஐரோப்பிய ஆணையத்திற்கும் இடையிலான இந்த அவசரக் கூட்டம் அன்றைய தினத்தின் தொடக்கத்திலேயே நடைபெறும் என்று அக்டோபர் 1ஆம் தேதி பிற்பகுதியில் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

எரிபொருள் செலவினங்களைக் குறைக்க ஐரோப்பாவின் உதவியைப் பெற வாஷிங்டன் கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதற்கிடையே அமெரிக்காவிலிருந்து டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பேசியிருக்கிறார்.

மில்வாக்கியில் நடைபெற்ற ஜி20 வர்த்தக அமைச்சர்கள் சந்திப்புக்கு இடையே அக்டோபர் 1ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத் தலைவர் மரோஸ் செஃப்கோவிக், டீசல் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை விதித்தால் அது ஐரோப்பியர்களுக்கு எதிர்பாராத ஒன்றாக இருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

டீசல் ஏற்றுமதித் தடை குறித்துப் பேசிய செஃப்கோவிக், “இது, நமது பொருளாதாரச் செயல்பாட்டில் மிகவும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்,” என்றார்.

அந்தக் கூட்டத்தில் எரிபொருள் ஏற்றுமதி குறித்து அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் விரிவாகப் பேசவில்லை என்றாலும், எந்தவொரு எதிர்பாராத சூழலையும் தவிர்க்க இருதரப்புப் பங்காளிகளும் நெருங்கிய தொடர்பில் இருக்க முடிவு செய்துள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈரான்மீது அமெரிக்கா தொடுத்துள்ள போரினால் டீசல் விலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதையடுத்து குறிப்பாக, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் டீசல் இருப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் விரும்புவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

“நமது ஐரோப்பிய பங்காளிகள் தங்களின் தற்போதைய வாக்குறுதிகளைத் துரிதப்படுத்த வேண்டும், டீசல் விநியோக இடையூறுகளைச் சமாளிக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,” என்று அமெரிக்க நிதித்துறை சமூக ஊடகப் பதிவில் வலியுறுத்தியுள்ளது.

எரிபொருள் விலை அதிகரித்து வருவதால் நவம்பரில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஐரோப்பிய ஒன்றியம்டோனல்ட் டிரம்ப்பிரான்ஸ்ஜெர்மனி