‘கேடிஎம்பி’யில் டீசல் ரயில்கள் தற்காலிகமானவை: அமைச்சர் லோக்

‘கேடிஎம்பி’யில் டீசல் ரயில்கள் தற்காலிகமானவை: அமைச்சர் லோக்

2 mins read
b5d518b0-c8af-428f-86d2-1da943482e7e
மலேசியப் போக்குவரத்து அமைச்சு, ரயில் போக்குவரத்துக்கு 11 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 15 மில்லியன் ரிங்கிட் வரையிலான வருடாந்தர மானியத்தை ஒதுக்கியிருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் சுட்டினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் ‘கேடிஎம்பி’ ரயில் சேவையில் பயன்படுத்தப்படும் டீசல் ரயில்கள் தற்காலிகமான தீர்வு என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறியுள்ளார்.

‘கேடிஎம்பி’ சேவையில் புதிய மின்சார ரயில்கள் இணைக்கப்படவிருக்கின்றன. அதுவரை, உள்ளூர்வாசிகள் தாமதத்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு டீசல் ரயில்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் பாரு சென்ட்ரல், பாசிர் கூடாங் ஆகிய பகுதிகளைக் கூலாயுடன் இணைக்கும் சேவை குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை திரு லோக் அறிவித்தார்.

“நமக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று, 10 புதிய மின்சார ரயில் பெட்டிகள் முழுமையாக உருவாக்கப்பட இரண்டிலிருந்து மூவாண்டுகள்வரை காத்திருக்கலாம். அல்லது ஜோகூர் மக்கள் இனியும் காத்திருப்பதைத் தவிர்க்க தற்போதுள்ள ரயில்களைப் பயன்படுத்தலாம்,” என்று அவர் விளக்கம் அளித்தார்.

புதிய மின்சார ரயில்கள் சரியான காலத்தில் வந்துசேரும் என்ற அவர், பொதுமக்கள் தற்போதுள்ள சேவையைப் பயன்படுத்த முடியும் என்றால் அவர்கள் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

ரயில் போக்குவரத்து மூலம் கூடுதல் மக்கள் பயனடையும் வகையில் 11 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 15 மில்லியன் ரிங்கிட் வரையிலான வருடாந்தர மானியத்தைப் போக்குவரத்து அமைச்சு ஒதுக்கியிருப்பதையும் திரு லோக் சுட்டினார்.

பாசிர் கூடாங்கையும் கெம்பாஸ் பாருவையும் இணைக்கும் தெற்குச் சேவையில் உள்ள இரண்டாம் பாதை, ஒரு புதிய மைல்கல் என்ற திரு லோக், இதற்குமுன் அது சரக்குச் சேவைகளுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டது எனப் பகிர்ந்துகொண்டார்.

“முதல்முறையாக அது பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது,” என்றார் அமைச்சர் லோக்.

‘கேடிஎம்பி’ சேவையில் டீசல் ரயில்களின் பயன்பாடு குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் கருத்துரைத்தார்.

கோலாலம்பூர், செரம்பான் ஆகியவற்றுடன் ஒப்புநோக்க ரயில் கட்டணங்கள் மும்மடங்கு அதிகமாக இருப்பதாகவும் சில தரப்புகள் குறைகூறின.

குறிப்புச் சொற்கள்