நீரிணையைக் கடப்பதில் ஐரோப்பிய, ஆசிய நிறுவனங்களுக்கு இடையே வேறுபாடு

நீரிணையைக் கடப்பதில் ஐரோப்பிய, ஆசிய நிறுவனங்களுக்கு இடையே வேறுபாடு

2 mins read
உலக வர்த்தகத்தின் நிலைத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது
1835b301-3799-4126-95ab-0706218ae53e
கப்பல்களும் படகுகளும் ஒமன் அருகில் உள்ள ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் புதன்கிழமை (ஏப்ரல் 22) காணப்பட்டன. - படம்: ராய்ட்டர்ஸ்

லாவ்சனே/சுவிட்சர்லாந்து: ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதில் ஆசிய, ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

பிரிட்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ‘பைனான்ஷியல் டைம்ஸ்’ ஊடகம் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை (ஏப்ரல் 20 - 22) வரை சுவிட்சர்லாந்தில் நடத்தும் உலகளாவிய அத்தியாவசியப் பொருள்களின் மாநாட்டில் அதுபற்றிய கருத்துகளை கப்பல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே உள்ள தற்காலிகச் சண்டை நிறுத்தத்தை பயன்படுத்தி, ஆசிய வர்த்தகக் கப்பல்கள் நீரிணையை கடக்கத் திட்டமிடுகின்றன. அபாயங்களைத் தவிர்த்து வரிகள் அல்லது கட்டணங்களைச் செலுத்த அவை தயாராகவுள்ளன.

ஆனால் ஐரோப்பிய நிறுவனங்கள், அமெரிக்கா, ஈரான்மீது விதித்த தடைகளைக் கருத்தில்கொண்டு நீரிணையைக் கடப்பதில் தயக்கம் காட்டுகின்றன.

பிப்ரவரி மாதம் மத்திய கிழக்கில் போர் தொடங்கியது முதல் நூற்றுக்கணக்கான கப்பல்கள் நீரிணையில் சிக்கித் தவிக்கின்றன. அதனால் உலகில் எரிபொருள், திரவ இயற்கை எரிவாயு (எல்பிஜி) போன்றவற்றுக்கு வரலாறு காணாத அளவுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அனைத்துலக கடற்துறை அமைப்பு கப்பல்களைக் காப்பாற்ற முயன்று வருவதாக அதன் தலைமைச் செயலாளர் அண்மையில் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் சில கப்பல்கள் நீரிணையைக் கடக்க முயன்றபோது ஈரான் அவற்றை மிரட்டியது. அதோடு மூன்று கப்பல்கள் மீது ஈரான் புதன்கிழமை ஆயுதத் தாக்குதலையும் நடத்தியதால் அவை மீண்டும் நீரிணைக்கே திரும்பின.

“அமெரிக்க நிதி அமைச்சின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் (ஒஎஃப்ஏசி) விதித்துள்ள தடைகளை ஐரோப்பிய நாடுகள் மீறத் தயங்குகின்றன. ஆயினும் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகள் நேரடியாக ஈரானிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தி, அவரவர் கடற்படைகளைக் காவலாக அனுப்பி நீரிணையைக் கடக்கின்றன,” என்று மெர்குரியா சரக்கு நிறுவனத் தலைவர் லேரி ஜான்சன் கூறினார்.

இதற்கிடையில் சிங்கப்பூரில் ‘கடல்துறை வாரம்’ எனப்படும் ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்ச்சி ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் நடக்கிறது.

சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் 20ஆம் ஆண்டாக ஏற்பாடு செய்த அந்நிகழ்வில் கப்பல் வர்த்தகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

உலகக் கப்பல்துறை கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சவாலாக தற்போதைய ஹோர்முஸ் நீரிணை பதற்றம் உருவெடுத்துள்ளது என்று அவர்கள் கருத்துரைத்தனர்.

அனைத்துலக சட்டத்தையும் விதிமுறைகளையும் அடிப்படையாகக் கடைப்பிடிக்கும் கப்பல்துறையில் ஆழமாக ஏற்பட்டுள்ள பிளவுகளை நீரிணையில் நடக்கும் நிகழ்வுகள் வெளிப்படுத்தியுள்ளன என்று அவர்கள் மேலும் கூறினர்.

கப்பல்கள், அவற்றின் சிப்பந்திகள் ஆகியோரின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, உலக வர்த்தகத்தின் நிலைத்தன்மையை தற்போதைய நிலவரம் கேள்விக்குறியாக்கி உள்ளது என்று அவர்கள் சிஎன்ஏ ஊடகத்திடம் கவலை தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்