நியூயார்க்கின் ரைக்கர்ஸ் சிறையை 2027ஆம் ஆண்டுக்குள் மூடுவதில் சிக்கல்

நியூயார்க்கின் ரைக்கர்ஸ் சிறையை 2027ஆம் ஆண்டுக்குள் மூடுவதில் சிக்கல்

படம்: ஏஎஃப்பி

12 Oct 2026 - 10:07 pm

1 mins read

நியூயார்க்: அமெரிக்காவின் ரைக்கர்ஸ் தீவு சிறை வளாகத்தை 2027ஆம் ஆண்டு மூடத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அச்சிறையை மூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், சமூக ஆர்வலர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மோசமான சுகாதாரம், வன்முறை சம்பவங்கள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற அச்சிறை 1932ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

ஜான் லெனனைக் கொன்ற மார்க் டேவிட் சாப்மேன், பிரபல ராப் பாடகர் டியூபாக் ஷகூர், இசைக்கலைஞர் சித் விசியஸ் ஆகியோர் இங்கு சிறை வைக்கப்பட்டு இருந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

ஊழியர் பற்றாக்குறை, போதைப்பொருள் புழக்கம், உடைந்த கதவுகள், சன்னல்கள் ஆகியவை காரணமாக, அச்சிறையை 2027ஆம் ஆண்டுக்குள் மூட நியூயார்க்கின் முன்னாள் மேயர் பில் டி பிளாசியோ உறுதியளித்தார்.

ரைக்கர்ஸ் சிறையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்தபோதிலும் அவற்றின் கட்டுமானம் தற்போது மிகவும் தாமதமாகி வருகிறது.

இவ்வாண்டு நியூயார்க் மேயராகப் பதவியேற்ற ஜோஹ்ரான் மம்தானி சிறையை மூடும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தாலும், 2027ஆம் ஆண்டுக்குள் சிறையை மூடமுடியாது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை ரைக்கர்ஸ் சிறையில் 48 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சிறையில் அடிப்படைச் சீரமைப்புகளை உடனடியாக மேற்கொள்ளவும் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் சமூக ஆர்வலர்கள் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
நியூயார்க்சிறைமூடல்சுகாதாரம்