மத்திய கிழக்குப் பிரச்சினைக்கு அரசதந்திரத் தீர்வே வழி: ர‌‌ஷ்ய, ஈரானிய அமைச்சர்கள்

மத்திய கிழக்குப் பிரச்சினைக்கு அரசதந்திரத் தீர்வே வழி: ர‌‌ஷ்ய, ஈரானிய அமைச்சர்கள்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

25 Sep 2026 - 11:12 am

1 mins read

நியூயார்க்: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசதந்திரத் தீர்வு ஒன்றே வழி என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சியும் தெரிவித்துள்ளனர்.

நியூயார்க்கில் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்துக்கு இடையே இருவரும் சந்தித்தபோது அந்தக் கருத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

இவ்வாண்டு பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போர் தொடுத்ததைத் தொடர்ந்து அந்த வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

“ஈரானைச் சுற்றியுள்ள சூழலுக்கு முக்கியத்துவம் அளித்துத் தற்போதைய வட்டார, அனைத்துலகப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது,” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்தது.

“அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சட்டவிரோத நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட இந்த நெருக்கடிக்கு, தூதரக முயற்சிகள் மூலம் எட்டப்படும் தீர்வைத் தவிர வேறு மாற்று வழியில்லை என்பது வலியுறுத்தப்பட்டது,” என்று அறிக்கை சுட்டியது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானும் சென்ற ஆண்டு அரசதந்திர ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இது இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கும் நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கும் வழிவகுக்கும் என்று கூறப்பட்டது.

இரு தரப்பும் ஒன்று மற்றொன்றுக்கு ராணுவத் தொழில்நுட்ப உத்திகளையும் கருவிகளையும் வழங்கி வருகின்றன.

ஈரான் போர் குறித்த ர‌‌ஷ்யாவின் நிலைப்பாட்டிற்காகத் திரு புட்டினுக்குத் திரு பெசெஷ்கியான் இம்மாதத் தொடக்கத்தில் நன்றி தெரிவித்தார்.

மேலும் இரு நாடுகளும் இணைந்து அமெரிக்காவின் ‘ஒருதலைப்பட்சமான போக்கை’ எதிர்க்க முடியும் என்றும் ஈரானிய அதிபர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
ர‌ஷ்யாஈரான்வெளியுறவு அமைச்சர்அரசதந்திர உறவு