மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், வரும் வியாழக்கிழமை (மே 15) உக்ரேனுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.
உக்ரேன் போர் தொடர்பில் நீண்டகால அமைதியைக் கொண்டுவரும் நோக்குடன் துருக்கியில் அச்சந்திப்பை நடத்தலாம் என்று திரு புட்டின் கூறியுள்ளார். அவரின் பரிந்துரையை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.
திரு புட்டின், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆயிரக்கணக்கான படைகளை உக்ரேனுக்குள் அனுப்பி அந்நாட்டின் மீது படையெடுத்தார். இன்றுவரை தொடரும் உக்ரேன் போரில் நூறாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மாண்டுவிட்டனர்.
அதனையடுத்து, 1962ஆம் ஆண்டு கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் (1962 Cuban Missile Crisis) பிறகு காணப்படாத அளவில் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவில் மோசமான விரிசல் ஏற்பட்டுள்ளது.
உக்ரேன் போர் தொடங்கக் காரணமாக இருந்த அடிப்படை அம்சங்களை விலக்கி நீடித்த அமைதியை நிலைநாட்டும் நோக்குடன் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று திரு புட்டின் குறிப்பிட்டார். அந்தப் பேச்சுவார்த்தை, தற்காலிகமாகப் போரை நிறுத்தும் நோக்கத்துடன் இடம்பெறக்கூடாது என்றும் அவர் சுட்டினார்.
“எவ்வித நிபந்தனையுமின்றி கியவ் நேரடிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம் என்பது எங்கள் பரிந்துரை,” என்று திரு புட்டின் ஞாயிற்றுக்கிழமை (மே 11) அதிகாலை கிரம்ளினில் பேசினார். “வரும் வியாழக்கிழமையே இஸ்தான்புல்லில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்ற பரிந்துரையை நாங்கள் கியவ் அதிகாரிகளிடம் முன்வைக்கிறோம்,” என்றார் அவர்.
பேச்சுவார்த்தை நடக்க வகைசெய்வது குறித்து துருக்கிய அதிபர் தயிப் எர்துவானிடம் ஞாயிற்றுக்கிழமை பேசவிருப்பதாக திரு புட்டின் கூறினார். அந்தப் பேச்சுவார்த்தை, போர் நிறுத்தத்துக்கு வழிவிடலாம் என்றும் திரு புட்டின் குறிப்பிட்டார்.
திரு புட்டினின் இந்தப் பரிந்துரை, போரை நிறுத்துவதற்குச் சாதகமான ஒன்று என அமெரிக்க அதிபர் டிரம்ப், தமக்குச் சொந்தமான ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
போரை நிறுத்துவது குறித்து ரஷ்யா ஆலோசிப்பது நம்பிக்கை தரும் அம்சம் என்று உக்ரேனிய அதிபர் வேரேலொடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
“ஒருவழியாக போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யர்கள் ஆலோசிக்கத் தொடங்கிவிட்டனர். எந்தப் போரையும் முடிவுக்குக் கொண்டுவருதற்கான முதற்கட்டம் போர்நிறுத்த ஒப்பந்தமாகும்,” என்று திரு ஸெலென்ஸ்கி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
வரும் திங்கட்கிழமை (மே 12) முதல் 30 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு மாஸ்கோ ஒப்புக்கொள்ளும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் ரஷ்யாவுடனான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு கியவ் தயாராய் இருப்பதாகவும் திரு ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.