அரசியல் அதிசயங்கள் நிகழக்கூடிய இலங்கையில் மேலும் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது.
இடதுசாரித் தலைவர் ஒருவர் அந்நாட்டின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு இருப்பதே அந்த அதிசயம்.
55 வயதாகும் அனுர குமார திசாநாயக சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஏறத்தாழ 5.7 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். பதிவான வாக்குகளில் 42.31 விழுக்காட்டை அவர் பெற்றார்.
அவர் தலைமை ஏற்ற தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், இடதுசாரி ஆதரவு அமைப்புகள் உள்ளிட்ட 28 அமைப்புகள் இடம்பெற்று உள்ளன. இருப்பினும், திசாநாயகவின் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியே கூட்டணியில் ஆகப்பெரியது.
ஞாயிறன்று வாக்குகள் எண்ணப்பட்ட முடிவுகள் வெளியான நிலையில் சஜித் பிரேமதாசவுக்கும் திசாநாயகவுக்கும் இடையில் போட்டி நிலவியது.
இறுதியில் பிரேமதாசவைவிட 1.3 மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்றார் திசாநாயக. பிரேமதாசவுக்கு 32.76 வாக்குகள் கிடைத்தன.
38 பேர் போட்டியிட்ட இந்தத் தேர்தலில், புதிய அதிபரைத் தேர்வுசெய்ய விருப்ப வாக்குகளையும் எண்ணவேண்டி வந்தது. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறை வந்த பிறகு, விருப்ப வாக்குகள் எண்ணப்ட்டது இதுவே முதல் முறை.
இலங்கையின் வடமேற்கு மாவட்டமான அனுரதபுரத்தில் உள்ள தம்புத்தேகமை கிராமத்தில் அரசாங்க ஊழியருக்கும் இல்லத்தரசிக்கும் மகனாகப் பிறந்தவர் திசாநாயக.
தொடர்புடைய செய்திகள்
மார்க்சிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவில் மாணவர் பருவத்திலேயே இணைந்து செயல்பட்ட திசாநாயக, பின்னர் அந்தக் கட்சியின் தலைவராக உருவெடுத்தார்.
பொருளியல் சீரழிவு ஏற்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் ஊழல் இல்லாத அரசாங்கத்தையும் பொருளியலைச் சீர்ப்படுத்தக்கூடிய தலைவரையும் இலங்கை மக்கள் தேடி வந்த வேளையில், அவர்களின் கவனத்தை திசாநாயக ஈர்த்தார்.
அண்மைக்காலமாக தமது எழுச்சிமிகு உரையால் மக்கள் மத்தியில் தமக்கு இருந்த செல்வாக்கை உயர்த்தினார்.
2019 அதிபர் தேர்தலில் வெறும் மூன்று விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்ற திசாநாயக ஐந்தாண்டு காலத்திற்குள் அதிபர் நாற்காலியைப் பிடித்துவிட்டார். 2019 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 418,553 மட்டுமே.
இனி அவர் எப்படி ஆட்சி செய்யப்போகிறார் என அரசியல் கவனிப்பாளர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
மார்க்சியத்தைத் தழுவியதால் சீனாவுடன் அவர் நெருக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
2023 பிப்ரவரியில், இந்தியாவைச் சேர்ந்த ‘அதானி க்ரீன் எனர்ஜி’ நிறுவனத்திற்கு 442 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலைகளை அமைக்க இலங்கையின் முதலீட்டு வாரியம் அனுமதி அளித்தது.
ஆனால், காற்றாலைகளால் உருவாக்கப்படும் மின்சாரம் இலங்கை மக்களுக்கு அதிக விலைக்கு விற்கப்படக்கூடும் எனக் கூறி, திசாநாயக தமது தேர்தல் பிரசாரத்தில் அந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்துப் பேசினார். அதனால், அவர் இந்தியாவுக்கு எதிரான அணுகுமுறையைப் பின்பற்றலாம் என்று ஒருசாரார் கூறுகின்றனர்.
முந்திய ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் முழுமையான இந்தியா ஆதரவுநிலையில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சீனாவிடமும் இந்தியாவிடமும் சமநிலையை திசாநாயக கடைப்பிடிப்பார் என்பதே பரவலான கருத்தாக உள்ளது.
செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்ற 17 மில்லியன் இலங்கை மக்களில் ஏறத்தாழ 75 விழுக்காட்டினர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். 2019 அதிபர் தேர்தலில் இதைவிட அதிகமாக 84 விழுக்காட்டினர் வாக்களித்திருந்தனர்.