கோலாலம்பூர்: சாட்சி வழக்குமூலம் அளிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்துக்குச் சென்றுகொண்டிருந்த பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திருவாட்டி பெமலா லிங் யுவே மாயமானதை அடுத்து, அவரது கணவருடன் சேர்த்து சந்தேகத்துக்குரிய சிலரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுவதாக மலேசியக் காவல்துறையின் தலைமை ஆய்வாளர் ரஸாருதீன் உசேன் தெரிவித்தார்.
இதுவரை 16 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் திருவாட்டி லிங்கின் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை.
42 வயது திருவாட்டி லிங்கைக் காணவில்லை என்று ஏப்ரல் 9ஆம் தேதியன்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அன்று அவர் வாக்குமூலம் அளிக்க ஆணையத்தின் தலைமையகத்திற்கு கிராப் காரில் சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அதற்கு முன்னதாக அவர் ஆணையத்தின் தலைமையகத்துக்குப் பலமுறை சென்றிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
திருவாட்டி லிங்கும் அவரது கணவரும் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் இருவர் மீதும் கள்ள பணத்தை நல்ல பணமாக்கும் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி லிங் சென்றுகொண்டிருந்த கிராப் காரை அடையாளம் தெரியாத மூன்று வாகனங்கள் நிறுத்தியதாக அவரது சகோதரரான சைமன் லிங் வான் சியோங் கூறினார்.
அந்த மூன்று வாகனங்களில் ஒன்றில் அவர் பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
திருவாட்டி லிங்கைக் கடத்தியவர் காவல்துறை சீருடை அணிந்திருந்ததாக திருவாட்டி லிங் பயணம் செய்த கிராப் காரின் ஓட்டுநர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாக திரு ரஸாருதீன் உசேன் கூறினார்.
திருவாட்டி லிங்கைக் கடத்தியவர் உண்மையான காவல்துறை அதிகாரியா அல்லது காவல்துறை அதிகாரியைப் போல வேடமிட்டவரா என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.
திருவாட்டி லிங்கின் பிள்ளை சிங்கப்பூரில் இருப்பதாகவும் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் என்றும் திரு ரஸாருதீன் உசேன் கூறினார்.
திருவாட்டி லிங்கின் கணவர் மலேசியாவில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

