ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் அறிவார்ந்த நகர மேம்பாட்டுத் திட்டத்தில் பேரிடர் கண்டுபிடிப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன. அவற்றில் நிலநடுக்கக் கண்காணிப்பும் அடங்கும்.
கைப்பேசி வாயிலாகப் பேரிடர் அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஜோகூர் மாநிலம் பரிசீலித்து வருவதாக ஜோகூர் வீடமைப்புக் குழுவின் தலைவர் முகம்மது ஜாஃப்னி முகம்மது ஷுகோர் தெரிவித்தார்.
“இந்த அணுகுமுறை ஜப்பானிலும் தென்கொரியாவிலும் பயன்படுத்தப்படுகிறது. நிலநடுக்கம், தீச்சம்பவம், விபத்து போன்ற பேரிடர்கள் நிகழ்ந்தால் அதுகுறித்து சம்பவ இடத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் உள்ளவர்களுக்கு அவசரகாலத் தகவல் அனுப்பிவைக்கப்படும். இந்த அணுகுமுறையை ஜோகூர் அறிவார்ந்த நகர குறியீட்டின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்த விரும்புகிறோம்,” என்றார் திரு முகம்மது ஜாஃப்னி.
பூமிக்கு அடியில் உள்ள தளத்தட்டுகள் ஒன்றின்மீது ஒன்று மோதுவதாலும் அல்லது பிரிவதாலும் நிலநடுக்கம் ஏற்படுகிறது. ஒரு தளதட்டுக்கு மிக அருகில் இன்னொரு தளத்தட்டு நகர்ந்து சென்றாலும் நிலநடுக்கம் ஏற்படலாம்.
தளத்தட்டுகள் சீராக இருக்கும் மண்டலத்தில் மலேசியா உள்ளபோதிலும் ஜோகூரின் சிகாமட்டில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 24) நிலநடுக்கம் ஏற்பட்டதை அவர் சுட்டினார்.
எனவே, மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறையும் நிலநடுக்க அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் முறைக்கும் அவசியத் தேவை இருப்பதாக திரு முகம்மது ஜாஃப்னி கூறினார்.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் சிகாமட்டில் சில கட்டடங்கள் சேதமடைந்தன. அவற்றில் இரண்டு சமூகக் கல்லூரிகளும் அடங்கும்.
இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட கல்லூரிகள் இணையம் மூலம் பாடம் கற்பித்தலுக்கு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) ஏற்பாடு செய்தன.
தொடர்புடைய செய்திகள்
கல்லூரிக் கட்டடங்கள் இடிந்து விழவில்லை என்றபோதிலும் அவற்றின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதாக ஜோகூர் மாநிலத்தின் உயர்கல்வித் துறை தெரிவித்தது.
கட்டடங்களின் நிலையைக் கண்டறிய தடயவியல் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிகாமட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மலேசிய அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே, சிங்கப்பூருக்கு அடியில் தளத்தட்டு நகர்வுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிங்கப்பூரில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்று புவியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால், நிலநடுக்கம் காரணமாக சிங்கப்பூரில் பேரளவிலான சேதங்கள் ஏற்படும் சாத்தியம் மிகவும் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், முன்னதாக இந்தோனீசியாவின் சுமத்ரா போன்ற இடங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது சிங்கப்பூரில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.