மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் அழுகிப்போன நிலையில் கை, கால்கள் வெட்டப்பட்ட பெண்ணின் உடல் ஒரு பைக்குள் காணப்பட்டது. அந்த உடல், ஒரு வெளிநாட்டவருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு அந்த விவரம் தெரியவந்ததாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் கமாருல் ஸாமான் மாமாத் கூறினார்.
மலேசியாவில் எல்லோருக்கும் குழந்தைப் பருவத்தில் 'பிசிஜி' எனப்படும் காசநோய் தடுப்பூசி போடப்படும்; மாண்ட பெண்ணின் கையில் அதற்கான தழும்பு இல்லை என்று திரு கமாருல் குறிப்பிட்டார்.
சாலைப் பாதுகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"மாண்ட பெண் அநேகமாக மலேசியாவைச் சேர்ந்தவர் அல்ல என்பதை மட்டும் தற்போதைக்கு என்னால் தெரிவிக்கமுடியும்," என்று கூறிய அவர், யாரும் காணாமற்போனதாக காவல்துறைக்குப் புகார் வரவில்லை என்றும் சொன்னார்.
மாண்ட பெண்ணுக்குக் குறைந்தது 25 வயது இருக்கும் என்றும் அவர் உயிரிழந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியிருக்கும் என்றும் சுல்தானா அமினா எனும் மருத்துவமனை தெரிவித்தது.


