கலிஃபோர்னியா: ’கேரெக்டர்.ஏஐ’ என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கரன்தீப் ஆனந்தைத் தனது முதல் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) டிஸ்னி நிறுவனம் நியமித்துள்ளது.
மூத்த நிர்வாக துணைத் தலைவருமாகவும் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாகவும் அவர் டிஸ்னியில் இணையவுள்ளார்.
தற்போது ஜோஷ் டி’அமாரோ டிஸ்னி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்படுகிறார்.
நிறுவனத்தின் தொழில்நுட்பம், கட்டமைப்பு, தரவு மேலாண்மை, ஏஐ இயங்குதளங்கள், தயாரிப்பு, பொறியியல் ஆகியவற்றை ஆனந்த் மேற்பார்வையிடுவார் என்று டிஸ்னி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களுடன் பயனர்கள் உரையாட உதவும் ‘கேரக்டர்.ஏஐ’ என்ற இணைய ‘சேட்பாட்’ தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இவர் பணியாற்றி வந்தார்.
டிஸ்னி தனது தனித்தனி வணிகப் பிரிவுகளுக்குத் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரிகளைக் கொண்டிருந்தாலும் முழு நிறுவனத்திற்கு இத்தகைய பதவியில் ஒருவரை நியமிப்பது இதுவே முதல்முறையாகும்.
‘கேரக்டர்.ஏஐ’ நிறுவனத்திற்கு முன்பு, மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களில் ஆனந்த் பணியாற்றினார்; ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள், வணிகப் பிரிவுகளுக்கான துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
திரு ஆனந்த் சிறந்த படைப்பாற்றல் கொண்டவர், உத்திபூர்வமிக்கவர், தொழில்நுட்ப தயாரிப்பு சார்ந்த சிந்தனை கொண்டவர் என்று திரு டி’அமாரோ பாராட்டினார். அத்துடன், அவர் ரசிகர்களின் உண்மையான விருப்பங்களை நன்கு உணர்ந்தவர் என்றும் திரு டி’அமாரோ புகழ்ந்துரைத்தார்.
செப்டம்பர் 2025ல் அனுப்பப்பட்ட எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பிய பிறகு கேரக்டர்.ஏஐ நிறுவனம் டிஸ்னி கதாபாத்திரங்களை அகற்றியது. மேலும், இந்தத் தொழில்முனைப்பு நிறுவனம், ‘சேட்பாட்’களின் பாதுகாப்பு தொடர்பான சட்ட வழக்குகளையும் எதிர்கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு ‘சேட்பாட்’ கருவிகள், சிறார்க்குத் தீங்கு விளைவிப்பதாகவும் ஃபுளோரிடாவைச் சேர்ந்த இளையர் ஒருவர் தனது சொந்த உயிரை மாய்த்துக்கொள்வதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறி, அவரட்உ குடும்பத்தினர் தொடர்ந்த வழக்குகளை கேரக்டர்.ஏஐ, கூகல் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் முடிவுக்குக் கொண்டுவந்தன.
அதுகுறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், அந்நிறுவனங்கள் தங்களது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவும் இல்லை.
