பெண் ஊழியர்கள் ஒதுக்கப்பட்ட விவகாரம்; ‘ஐஃபிள்’ கோபுரம் மீண்டும் திறப்பு

பெண் ஊழியர்கள் ஒதுக்கப்பட்ட விவகாரம்; ‘ஐஃபிள்’ கோபுரம் மீண்டும் திறப்பு

2 mins read
21add3ef-2346-4f39-acef-66eb25bd064f
பாலின அடிப்படையில் பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்துப் போராட்டம் வெடித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ‘ஐஃபிள்’ கோபுரத்தை இந்து சமய ஆன்மிகக்குழு ஒன்று பார்வையிடச் சென்றபோது, அங்கு செய்யப்பட்ட சில ஏற்பாடுகள் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

ஏறக்குறைய நூறு பேர் கொண்ட அந்த ஆன்மிகக்குழு, அதிகாலை வேளையில் வருகை தந்தபோது கோபுர வளாகத்தில் பணியில் இருந்த பெண் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது.

பெண்களுடனான நேரடித் தொடர்புகளைத் தவிர்க்கும் வகையில் தங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.

இதையடுத்து ஏற்பட்ட சர்ச்சையால் கோபுர நிர்வாகத்தை எதிர்த்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுடைய பணியிடத்தை விட்டு வேறு இடத்துக்குச் செல்லுமாறும் அல்லது மறைவாக இருக்குமாறும் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக பெண் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, பாலின அடிப்படையில் பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்துப் போராட்டம் வெடித்தது.

‘ஐஃபிள்’ கோபுர ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அக்கோபுரத்தை நிர்வகிக்கும் ‘சேட்’ (SETE) நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

போச்சசான்வாசி அக்‌ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS-பாப்ஸ்) என்ற அமைப்பினர் விதித்த அத்தகைய நிபந்தனைகளை ஏற்றிருக்கக் கூடாது எனக் கோபுர நிர்வாகம் பின்னர் தெரிவித்தது.

இந்நிலையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘பாப்ஸ்’ அமைப்பு சார்பில் மன்னிப்பு கோரப்பட்டது.

“பணியாளர்களுக்கும் மற்ற பார்வையாளர்களுக்கும் இடையூறு ஏற்படாமல் இருக்கவே அதிகாலை நேரத்தில் பயணம் திட்டமிடப்பட்டது. யாரையும் தடுக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல,” என்று அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்ட ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதால் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) மூடப்பட்ட ‘ஐஃபிள்’ கோபுரம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) திறக்கப்பட்டது.

இதனிடையே, “பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் சரிசமமாக மதிக்கப்படுகிறார்கள். எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் மறைக்கப்படுவதையும் அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதையும் ஏற்க முடியாது,” என்று அந்நாட்டு முக்கியப் பிரமுகர்கள் இச்சம்பவம் தொடர்பாக தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்