கோலாலம்பூர்: தொழில்நுட்பக் கோளாற்றால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாம் முனைய வருகைப் பகுதியில் புதன்கிழமை (ஜூலை 23) மாலையிலிருந்து தானியக்கக் குடிநுழைவு அனுமதி நுழைவாயில்களில் பல முடங்கின.
அதனால், அங்கு நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
அதனையடுத்து, அங்குத் தரையிறங்கிய பயணிகளுக்குக் குடிநுழைவு அனுமதி வழங்குவதற்காகக் கூடுதல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாம் முனைய வருகைப் பகுதியில் 10 தானியக்கக் குடிநுழைவு அனுமதிக் கதவுகளும் புறப்பாட்டுப் பகுதியில் 10 நுழைவாயில்களும் இருப்பதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆயினும், முதலாம் முனையத்தில் உள்ள அத்தகைய 100 நுழைவாயில்களும் முறையாகச் செயல்படுவதாகக் கூறப்பட்டது.
மலேசியக் கடப்பிதழ் வைத்துள்ளவர்கள் தானியக்க நுழைவாயில்கள் வழியாகக் கடந்துசெல்ல முடிகிறது என்றும் வெளிநாட்டவர்களே சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, 2025 ஜூலை 18ஆம் தேதி மலேசியா முழுவதும் 200க்கும் அதிகமான தானியக்கக் குடிநுழைவு அனுமதி நுழைவாயில்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கின. அதனால், 500,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜோகூர் வழியாகப் பயணம் செய்தவர்கள்.
‘மைஐஎம்எம்எஸ்’ தரவுத்தரளத்தை அனைத்துலக ஆணையத் தரவுத்தளத்துடன் ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே அதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, ஜோகூர் பாருவிலுள்ள குடிநுழைவு, சோதனைச் சாவடிக் கட்டடத்திலும் (பிஎஸ்ஐ) இரண்டாம் பாலத்திற்கு அருகிலுள்ள மலேசியக் குடிநுழைவு, சோதனைச் சாவடிக் கட்டடத்திலும் (கேஎஸ்ஏபி) அனைத்துத் தானியக்க குடிநுழைவு அனுமதி நுழைவாயில்களும் செயல்பாட்டில் உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஜூன் 1ஆம் தேதியிலிருந்து 63 நாடுகளைச் சேர்ந்தவர்களும் மலேசியாவில் பணியாற்றும் அரசதந்திரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் தானியக்கக் குடிநுழைவு அனுமதி நுழைவாயில்களைப் பயன்படுத்தத் தகுதிபெற்றுள்ளனர்.