இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் ஹரிணி அமரசூரிய

3 mins read
a75cd68e-3647-450a-9e10-bb22274854c1
இலங்கையின் 16வது பிரதமராகப் பதவியேற்றார் 54 வயது முனைவர் ஹரிணி அமரசூரிய. - படம்: இலங்கை ஊடகம்

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, 54, பதவியேற்றுள்ளார்.

கல்வியாளர், உரிமைகளுக்காகப் போராடுபவர், பல்கலைக்கழக விரிவுரையாளரான ஹரிணி பிரதமர் பதவியேற்றிருப்பது நாட்டின் அரசியல் சூழலில் ஒரு மாற்றத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

சமூகவியல் பேராசிரியரான ஹரிணி நான்காண்டுகளுக்கு முன் 2020ல் நாடாளுமன்ற உறுப்பினரானார். கல்வி, சமூக நீதிக்கான பணிகளில் பெயர்பொறித்த முனைவர் ஹரிணியின் நியமனம், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் சூழலை நோக்கிய மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரை அடுத்து இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக பதவியேற்றுள்ள முனைவர் ஹரினி அமரசூரிய நீதி, கல்வி , தொழிலாளர், தொழில், சுகாதாரம், அறிவியல் - தொழில்நுட்பம், முதலீட்டு அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அமைச்சரவையின் தலைவரான அதிபர் அனுர குமார திசாநாயக்க, ஹரிணி மற்றும் மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மொத்தம் நான்கு பேரிடையே அமைச்சுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. அரச தலைவர் அனுரகுமார திசநாயக்கவின் கீழ் உள்ள அமைச்சுக்கள்:

பாதுகாப்பு, நிதி, பொருளியல் மேம்பாடு, கொள்கை உருவாக்கம், திட்டமிடல், சுற்றுலா, எரிசக்தி அமைச்சுகளுக்கு அதிபர் அனுர குமார திசாநாயக்க பொறுப்பேற்கிறார்.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) அதிபர் அலுவலகத்தில் இலங்கையின் 16வனது பிரதமராகப் பதவியேற்றார் முனைவர் ஹரிணி அமரசூரிய.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) அதிபர் அலுவலகத்தில் இலங்கையின் 16வனது பிரதமராகப் பதவியேற்றார் முனைவர் ஹரிணி அமரசூரிய. - படம்: இலங்கை ஊடகம்

புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் இடைக்கால அமைச்சர்களாக அவர்கள் செயல்படுவார்கள். “இலங்கையின் வரலாற்றில் மிகச்சிறிய அமைச்சரவையை நாங்கள் கொண்டுள்ளோம்” என கட்சியின் உறுப்பினர் நாமல் கருணாரத்ன செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நவம்பர் மாத இறுதியில் தேர்தல் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அதிபர் தேர்தலில் தெளிவான வெற்றியைப் பெற்றிருக்கும் 55 வயதுஅனுரகுமார திசாநாயக்காவுக்கு கடுமையான பணி இனிமேல்தான் காத்திருக்கிறது.

நாட்டின் ஏழை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றும் அதேவேளையில், அனைத்துலக பண நிதியத்திலிருந்து நிதி உதவியையும் பெற வேண்டும். இரண்டுக்கும் இடையே சமநிலையைக் காணவேண்டிய கடும் பணியை அவர் மேற்கொள்ள வேண்டும்.

மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வறுமையில் வாடும் நாட்டில், மார்க்ஸிஸ்ட் சார்பான அனுர குமார திசாநாயக்காவின் வரிக் குறைப்பு உறுதிமொழி, அவருக்கு ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளியல் நெருக்கடியிலிருந்து மெல்ல மீண்டெழுந்து வரும் இலங்கை, அதன் அனைத்துலக கடனின் முதல் தவணையைச் செலுத்தத் தவறியுள்ள வேளையில் அனுரகுமார பொறுப்பேற்றுள்ளார்.

புதிய அதிபருடன் இணைந்து செயல்படுவதாக அனைத்துலகப் பண நிதியம் தெரிவித்துள்ளது. மூன்றாவது மதிப்பாய்வு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பில் விரைவில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அனைத்துலக நாணய ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.   இதற்கிடையே, இந்தியாவிற்கும்; சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில் சிக்கிக்கொள்ள இலங்கை விரும்பவில்லை என்று அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

“இரண்டு நாடுகளும் பெறுமதிப்புமிக்க மிக்க நணபர்கள். அவர்கள் நெருங்கிய சகாக்களாக மாறுவதை விரும்புகின்றோம்,” என அனுரகுமாரதிசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் வட்டாரப் பதற்றங்களுக்கிடையில் இலங்கையின் இறைமையை பாதுகாக்க நடுநிலையான வெளிவிவகார கொள்கை அவசியம் என்ற அவர், சாதகமான அரசதந்திர உறவுகளை பேணுவதற்கு முயற்சி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்