காட்மாண்டு: நேப்பாள அதிபர் ராம் சந்திர பௌடல், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷிலா கார்கியை இடைக்கால பிரதமராக நியமித்துள்ளார்.
பெரும் போராட்டங்கள் காரணமாக அந்நாட்டின் அரசாங்கம் கவிழ்ந்ததை அடுத்து திருவாட்டி சுஷிலா பதவியேற்றார்.
புதிய பிரதமரின் பரிந்துரையின் பேரில், அதிபர் நாடாளுமன்றத்தையும் கலைத்து, மார்ச் 5ஐ தேர்தல் தேதியாக உறுதி செய்துள்ளதை அந்நாட்டு அதிபர் அலுவலகம் வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக சட்டமன்றத் தேர்தல், 2022 இல் நடைபெற்றது.
நேப்பாளத்தின் தலைமை நீதிபதி பொறுப்பை இதுவரை வகுத்துள்ள ஒரே பெண்ணான திருவாட்டி சுஷிலா கார்கி, 73, 2016, 2017 ஆம் ஆண்டுகளில் தலைமை நீதிபதியாகச் செயல்பட்டார்.
தலைமை நீதிபதியாக இருந்தபோது அரசாங்கத்தில் நடந்த ஊழலுக்கு எதிராக எடுத்த உறுதியான நிலைப்பாட்டிற்காக திருவாட்டி சுஷிலா அறியப்பட்டார்.
ஏப்ரல் 2017 இல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவரைப் பதவி நீக்கம் செய்ய முயன்று மேலும் சில குற்றச்சாட்டுகளைச் சுமத்த முயன்றனர். ஆனால் அந்த முயற்சி தோற்றது.
திங்கட்கிழமை தலைநகர் காட்மாண்டுவில் சமூக ஊடகத் தடையை எதிர்த்துத் தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், காவல்துறையினருடனான மோதலுக்குப் பின் வன்முறையாக மாறியது.
தொடர்புடைய செய்திகள்
சமூக ஊடங்களின் மீதான தடை மீட்டுக்கொள்ளப்பட்டபோதும் நாட்டு நிர்வாகம் குறித்த அதிருப்தியால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராடினர்.
இதனால் நாட்டின் நாடாளுமன்றக் கட்டடம், அதிபர் மாளிகை மற்றும் வணிக நிறுவனங்களைத் தாக்கி அவர்கள் எரித்தனர்.
வன்முறைக்குப் பிறகு பிரதமர் கட்க பிரசாத் ஷர்மா ஒலி, கடந்த செவ்வாய்க்கிழமை பதவி விலகினார்.