வெளிப்புறங்களில் பொருள்களை எரிக்கக்கூடாது: மலேசியக் காவல்துறை எச்சரிக்கை

வெளிப்புறங்களில் பொருள்களை எரிக்கக்கூடாது: மலேசியக் காவல்துறை எச்சரிக்கை

2 mins read
மூவார் காட்டுத்தீச் சம்பவத்தைத் தொடர்ந்து நடவடிக்கை
04c9de99-00b5-4ee1-aee1-59b0233abf04
பொதுமக்கள் வெளிப்புறங்களில் பொருள்களை எரித்தால் உயிர்ச்சேதம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக மலேசியக் காவல்துறை எச்சரித்துள்ளது. - படம்: த ஸ்டார்/ ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

மூவார்: பொதுமக்கள் வெளிப்புறங்களில் பொருள்களை எரிக்கக்கூடாது என்று மலேசியக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு எரிப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்றும் அதனால் உயிர், உடைமைகள், பொதுச் சுகாதாரத்துக்குக் கேடு நேரும் அபாயமுண்டு என்றும் அது வலியுறுத்தியது.

மூவார் வட்டாரக் காவல்துறை துணை ஆணையர் ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ், வெளிப்புறங்களில் பொருள்களை எரிக்கும் நடவடிக்கை தொடர்ந்து கவலையளிக்கும் அம்சமாக விளங்குவதாகக் கூறினார். குறிப்பாக, வெப்பமான, வறண்ட வானிலை நிலவும் வேளைகளில் எரிப்பதைச் சுட்டிய அவர், அது எளிதில் மிகப் பெரிய, மேலும் ஆபத்தான தீச்சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்றார்.

முன்னதாக, மூவாரில் மூண்ட காட்டுத் தீயைத் தீயணைப்பு, மீட்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் அந்தத் தீ ஏறத்தாழ 56 சதுர மீட்டர் பரப்பளவில் எரிந்துகொண்டிருந்ததாகவும் அவர் சொன்னார்.

“அது சிறிய தீச்சம்பவம்தான் என்றாலும் உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால் அது மிக விரைவாகப் பரவும் ஆபத்து உண்டு,” என்றார் திரு ரயிஸ் முக்லிஸ்.

குப்பை, புற்கள், புதர்கள், விளைநிலங்கள் போன்றவற்றை எரிக்கையில் மிகப் பெரிய தீச்சம்பவங்கள் ஏற்படக்கூடும் என்பதையும் அதனால் காற்றின் தரம் பாதிக்கப்படுவதோடு அந்த இடங்களுக்கு அருகில் வசிப்போரின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

எனவே, பொது இடங்களில் எந்த வகையான எரிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.

அக்கம்பக்கத் தீச்சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்கும்படியும் தீச்சம்பவங்கள் அல்லது சந்தேகத்துக்குரிய புகைமூட்டம் காணப்பட்டால் அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தரலாம் அல்லது 999 என்ற அவசரகாலத் தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் என்று திரு ரயிஸ் முக்லிஸ் கூறினார்.

பெங்கராங் காட்டுத் தீச்சம்பவத்தை அடுத்து வெளியேற்றப்பட்ட 157 பேரும் நிவாரண நிலையங்களிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்கராங் காட்டுத் தீச்சம்பவத்தை அடுத்து வெளியேற்றப்பட்ட 157 பேரும் நிவாரண நிலையங்களிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். - படம்: த ஸ்டார்/ ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

இதற்கிடையே, பெங்கராங்கில் ஜனவரி 23ஆம் தேதி மூண்ட காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாலான் சுங்கை கபாலில் மூண்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் காற்றின் தரம் வழக்கநிலைக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமை மேம்பாட்டுள்ளதால், தீச்சம்பவத்தை அடுத்து தற்காலிக நிவாரண நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட 157 பேரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோத்தா திங்கி மாவட்டப் பேரிடர் நிர்வாகக் குழுத் தலைவர் மிஸ்வான் யூனூஸ் கூறினார். கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

குறிப்புச் சொற்கள்