கோலாலம்பூர்: மலேசியா ஏர்லைன்ஸ், ஃபயர்பிளை, எம்ஏஎஸ் விங்ஸ் விமானங்களில் பயணம் செய்வோர், ஏப்ரல் 1 முதல், கையடக்க மின்னூட்டிகளை எல்லா நேரங்களிலும் தங்களுடன் வைத்திருக்க வேண்டும்.
மலேசியா ஏர்லைன்ஸ் வியாழக்கிழமை (மார்ச் 20) அதன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், விமானங்களில் கையடக்க மின்னூட்டிகளைக் கொண்டுசெல்லும்போது, புதுப்பிக்கப்பட்ட கொள்கைக்கு அனைத்துப் பயணிகளும் உட்பட்டு நடக்க வேண்டும் என்றது.
“எல்லா நேரங்களிலும் கையடக்க மின்னூட்டிகள் உங்களுடன் இருக்க வேண்டும். இருக்கைக்குமேல் பயணப்பெட்டிகளை வைக்குமிடத்தில் மின்னூட்டிகளை வைக்கக்கூடாது.
“விமானப் பயணத்தின்போது, இருக்கைக்குக்கீழ் உங்கள் பயணப்பைகளுக்குள் அல்லது உங்களுக்கு முன்னால் உள்ள இருக்கை பாக்கெட்டுக்குள் மின்னூட்டிகளை வைக்கலாம்,” என மலேசியா ஏர்லைன்ஸ் குறிப்பிட்டது.
குறிப்பாக, காந்தசக்தி உடைய கம்பியில்லா மின்னூட்டிகளைத் தனிப் பையிலோ சுருக்குப்பையிலோ வைக்க வேண்டும் என அது சொன்னது. தங்களுக்குத் தெரியாமல் இத்தகைய மின்னூட்டிகள் தன்னிச்சையாகச் செயல்படுவதை பயணிகள் இதன்மூலம் தவிர்க்கலாம்.
“விமானத்தில் மின்னூட்டிகளுக்கு மின்னூட்டம் செய்வதற்கு அல்லது அவற்றைப் பயன்படுத்துவதற்குக் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
“மின்னூட்டிகளையும் லித்தியம்-அயோன் மின்கலன்களையும் ‘செக்-இன்’ பயணப்பெட்டிகளில் வைக்கவும் கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது,” என அறிக்கை குறிப்பிட்டது.
விமானப் பயணப் பாதுகாப்பை உறுதிசெய்யவே இத்தகைய கொள்கைகள் நடப்பில் இருப்பதாக மலேசியா ஏர்லைன்ஸ் வலியுறுத்தியது.

