கோலாலம்பூர்: மலேசியாவில் தேசிய சேவை பயிற்சித் திட்டம் 3.0 நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் நன்கு ஆராயப்படவேண்டும் என்று நாடாளுமன்றச் சிறப்புத் தேர்வுக் குழு கூறியுள்ளது.
அரசாங்கம் அந்த சர்ச்சைக்குரிய திட்டத்தின் மூன்றாம் பதிப்பைச் செயல்படுத்தவேண்டாம் என்று குழு பரிந்துரைத்துள்ளதாக அக்குழுவின் தேசக் கட்டுமான, கல்வி, மனிதவள மேம்பாட்டுத் தலைவர் சைஃபுடின் அப்துல்லா தெரிவித்தார்.
“அரசாங்கம் தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்த விரும்பினால், மேலும் தீவிரமான ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்,” என்று நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை (டிசம்பர் 5) கூறினார்.
அதோடு, முதன்முதலில் 2004ல் நடப்புக்கு வந்ததிலிருந்து அந்தத் திட்டத்திற்கு தெளிவான நோக்கமோ இலக்கோ இல்லை என்றும் அவர் கூறினார்.
“இலக்குகளும் பாடத்திட்டங்களும் ராணுவப் பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்டு அமையவேண்டும். நமக்கு இது உண்மையிலேயே தேவையா என்பதுதான் கேள்வி,” என்று திரு சைஃபுடின் கூறினார்.
தற்போதைய பாடத்திட்டங்கள் அடிப்படை ராணுவமும் தேசியவாதமும் கலந்தவையாக உள்ளன என்று அவர் கூறினார். குறிப்பாக, அடிப்படை ராணுவத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
“இருப்பினும், பாடத்திட்டங்களின் சில உள்ளடக்கங்களில், அடிப்படை ராணுவப் பயிற்சி குறித்து எதுவும் இல்லை,” என்றார் அவர்.
தொழில்நுட்ப, தொழில்சார் கல்விப் பயிற்சியையும் தேசியவாதத்தையும் உள்ளடக்கிய பாடத்திட்டம், மற்ற திட்டங்கள் அல்லது ஏற்கெனவே உள்ள கல்விக்கழகங்கள் வழி கற்பிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
‘தேசிய சேவை 1.0, 2.0 ஆகியவை குறித்து முன்னதாக நடத்தப்பட்ட ஆய்வுகள், பயிற்சி பெறுவோரிடையே நீண்டகால ஆக்கபூர்வமான முடிவுகளைக் காட்டவில்லை. அவற்றை நடைமுறைப்படுத்த அதிக செலவானது,” என்றும் திரு சைஃபுடின் கூறினார்.
முன்னதாக, மறுசீரமைக்கப்பட்ட தேசிய சேவை திட்டம் 2025 ஜூன் அல்லது ஜூலையில் கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சர் முகம்மது காலிட் நொர்டின் கூறியிருந்தார்.

