சோல்: தென்கொரியாவில் அரசாங்கத் திட்டத்தை எதிர்த்து 1,600க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பிப்ரவரி 20ஆம் தேதி வெளிநடப்பு செய்தனர்.
மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிக்க, மருத்துவப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 100 மருத்துவமனைகளில் ஏறக்குறைய 6,415 பயிற்சி மருத்துவர்கள் பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளதாக சுகாதார நல அமைச்சு தெரிவித்தது. 700க்கும் அதிகமான பயிற்சி மருத்துவர்கள் வேலைக்குத் திரும்பவேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது.
வெளிநடப்பு எந்த அளவில் உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், அதன் காரணமாக சில மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தென்கொரியாவில் கிட்டத்தட்ட 13,000 பயிற்சி மருத்துவர்கள் உள்ளதாக அமைச்சு கூறியது. இதுவரை பதவி விலகல் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிக்க, 2025ஆம் ஆண்டிலிருந்து மருத்துவப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை மேலும் 2,000 அதிகரிக்க அதிபர் யூன் சுக் யோலின் அரசாங்கம் திட்டமிடுகிறது. தற்போது அது 3,058ஆக உள்ளது.
இந்தத் திட்டம் மூலம், தென்கொரியாவில் மேலும் அதிகமான பகுதிகளில் சிறப்பு மருத்துவர்கள் இருப்பார்கள் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறுகிறது.
உலகில் ஆக விரைவாக மூப்படைந்துவரும் மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்று தென்கொரியா. அது மக்கள்தொகை நெருக்கடியை எதிர்நோக்குவதால், இந்தத் திட்டம் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் திட்டத்தை பொதுமக்களில் ஏறக்குறைய 75 விழுக்காட்டினர் ஆதரிப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. புதிய திட்டம் மூலம் காத்திருக்கும் நேரம் குறையக்கூடும் என்று நம்பப்படுகிறது.