சோல்: தென்கொரியாவின் டேஜியோன் நகரத்தில் இருக்கும் அந்நாட்டின் தேசிய தகவல் திரட்டு நிலையத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.
அச்சம்பவத்தில், ‘ஜி டிரைவ்’ எனப்படும் தென்கொரியாவின் மத்திய ஆவண சேமிப்பு அமைப்பிலிருந்த கிட்டத்தட்ட 191,000 அரசு ஊழியர்களின் பணி தொடர்பான ஆவணங்கள் கருகியதாகக் கூறப்படுகிறது.
தீ விபத்தால் சேதமடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 96 அமைப்புகளில் ‘ஜி டிரைவ்’வும் ஒன்று எனத் திங்கட்கிழமையன்று அந்நாட்டு உள்துறை, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
2018ஆம் ஆண்டு முதல் பணி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அந்நாட்டு அரசு ஊழியர்கள் அந்த அமைப்பில் சேமிக்க அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆவணங்களின் நகல்கள் வேறு எந்த அமைப்பிலும் சேமிக்கப்படவில்லை.
“ ‘ஜி டிரைவ்’ அமைப்பில் சேமிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் அழிந்துபோயின. அவற்றின் நகல்களை வேறு அமைப்பில் சேமிக்காத காரணத்தால் அவற்றை மீட்டெக்க முடியவில்லை,” எனத் திங்கட்கிழமை (அக்டோபர் 1) நடந்த செய்தியாளர் சந்திப்பில் தென்கொரியப் பொதுச் சேவை பிரிவின் தலைமை இயக்குநர் லிம் ஜியோங்-கியூ தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாத நிலவரப்படி, கிட்டத்தட்ட 191,000 அரசு ஊழியர்களின் ஆவணங்களைச் சேமிப்பதற்காக அந்த அமைப்பு ஒதுக்கப்பட்டது. தென் கொரியாவில் 750,000 பேர் அரசாங்க நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
பணி தொடர்பான ஆவணங்களைச் சேமிக்க அந்த அமைப்பையே அந்நாட்டு அரசு நிறுவனங்கள் பயன்படுத்தியதால், அவற்றின் பணி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

