சட்டோகிராம்: நீதிமன்ற வளாகத்திலிருந்து கட்டுக்கட்டாகக் காணாமல் போன ஆவணங்கள் பழைய தாள் கடையில் கிலோ கணக்கில் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் பங்ளாதேஷின் சட்டோகிராம் நகரில் நிகழ்ந்தது.
சட்டோகிராம் பெருநகர நீதிமன்றத்தில் அரசாங்க வழக்கறிஞர் அறைக்குமுன் வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆவணங்கள் இம்மாதம் 5ஆம் தேதி காணாமல் போயின.
இந்நிலையில், அவை அங்குள்ள பழைய தாள் விற்பனைக் கடை ஒன்றில் கிலோ 16 டாக்கா (S$0.18) என விலைக்கு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, வியாழக்கிழமையன்று (ஜனவரி 9) அக்கடையிலிருந்து ஒன்பது சாக்குப்பைகளில் அந்த ஆவணங்கள் மீட்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளைக் கடந்த இரு நாள்களாகக் காவல்துறை ஆராய்ந்து வந்தது. அதனடிப்படையில், இளையர் ஒருவரைப் பிடித்து விசாரிக்க, அவர் ஆவணங்களைத் திருடியதை ஒப்புக்கொண்டார்.
அவர் அளித்த தகவலின்மூலம் நீதிமன்ற ஆவணங்கள் மீட்கப்பட்டன.
ஆவணங்களைத் திருடியவர் நீதிமன்ற வளாகத்தில் தேநீர் விற்றுவந்தார் என்று காவல்துறை கூறியது. ஆயினும், அவர் எதற்காகத் திருடினார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஆவணங்கள் 1,911 வழக்குகள் தொடர்புடையவை என்பதால் இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதாக ‘டெய்லி ஸ்டார்’ செய்தி தெரிவித்தது.

