உறையும் குளிரில் தவித்த உரிமையாளரின் உயிரைக் காப்பாற்றிய நாய்

1 mins read
db53d971-f741-4fa5-b3b8-261c4c2deaed
இரவு நேரம், உறையும் குளிர் எனப் பதறிப்போன கேரனை அவரது நாய் கேமி கைவிடாமல் துணையாக இருந்தது. - படம்: லேன் காவல்துறை

அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள காட்டில் காணாமல்போன முதியவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் மாதம் 29ஆம் தேதி மதிய நேரத்தில் தனது செல்லப் பிராணியான கேமி நாயுடன் 82 வயது கேரன் ஜாய்ஸ் நடைப் பயிற்சி செய்துள்ளார்.

கேரனுக்கு மறதி நோய் உள்ளது. நடைப் பயிற்சியின்போது கேரன் வழி தவறி காட்டிற்குள் சென்று மாட்டிக்கொண்டார்.

கேரன் காணாமல் போனதை உணர்ந்த அப்பகுதி மக்கள் தேடுதல் பணியில் குதித்தனர். காவல்துறையும் களத்தில் இறங்கியது.

இரவு நேரம், உறையும் குளிர் எனப் பதறிப்போன கேரனை அவரது நாய் கேமி கைவிடாமல் துணையாக இருந்தது. கேரனை கதகதப்பாகவும் அது வைத்துக்கொண்டது.

தேடுதல் பணியின்போது அதிகாரிகள் கேரன், கேமியின் பெயரை ஒலித்தனர். கேமி தனது பெயரைக் கேட்டவுடன் குரைக்கத் தொடங்கியது.

கிட்டத்தட்ட 300 மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்து நாய் குரைப்பதைக் கேட்டு அதிகாரிகள் கேரன் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு மீட்டனர்.

கேரன் கடுமையான குளிர் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குக் காட்டிலேயே முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார்.

கேரனை மீட்க கேமி மிகப்பெரும் உதவியாக இருந்ததாக மீட்புப் பணி அதிகாரிகள் கூறினர். கேமியை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்