லங்காவி: மலேசியாவின் லங்காவியிலுள்ள கம்புங் டெடெக் பகுதியில் நான்கு வயதுச் சிறுவனைச் சில நாய்கள் கடித்ததில் அவனுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (மார்ச் 1) காலை 10.30 மணிக்கு நடந்த இச்சம்பவத்தில் நாய்கள் அச்சிறுவனைச் சூழ்ந்துகொண்டு கடித்ததாகக் கூறப்பட்டது.
இதனால் சிறுவனின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. மேலும், அவன் உடலெங்கும் நாய்கள் கடித்துக் காயம் ஏற்படுத்தியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறான்.
சம்பவம் குறித்து அவனது தாயாரும் மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையிடம் புகாரளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

