வாஷிங்டன்: அமெரிக்காவின் 40 பெரிய விமான நிலையங்களில் வரும் நாள்களில் விமானச் சேவைகள் 10 விழுக்காடு வரை குறைக்கப்படக்கூடும்.
அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கநிலை தொடர்ந்தால் அவ்வாறு செய்யப்படும் என்று அமெரிக்கப் போக்குவரத்து அமைச்சர் ஷான் டஃபி கூறியிருக்கிறார்.
அதனால் உள்நாட்டு விமானச் சேவைகள் பாதிக்கப்படும். அனைத்துலக விமானச் சேவைகள் பாதிக்கப்படமாட்டா. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், வேலையில் சோர்வடைந்திருப்பதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
ஏறக்குறைய 1.4 மில்லியன் ஊழியர்கள், சம்பளமின்றி வேலை செய்கின்றனர். பலருக்குக் கட்டாய விடுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்படுவதன் தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்னும் இணக்கம் எட்டப்படவில்லை.
விமானச் சேவைகளைக் குறைப்பதால் அட்லான்டா, நியூயார்க், வாஷிங்டன் டிசி முதலிய நகரங்களில் உள்ள பெரிய விமான நிலையங்கள் பாதிக்கப்படும். “எங்களின் வேலையில் முன்னுரிமை பாதுகாப்புக்கே. இது அரசியல் அல்ல. மாறாக, கட்டுப்பாட்டு அதிகாரிகள் சம்பளமின்றித் தொடர்ந்து வேலை செய்யும் நிலையில், தரவுகளை மதிப்பீடு செய்து, கட்டமைப்பில் வரக்கூடிய இடையூறுகளைத் தணிப்பது,” என்று திரு டஃபி அறிக்கையொன்றில் தெரிவித்தார்.
ஏராளமான ஊழியர்கள் மன உளைச்சலால் நோய்வாய்ப்படுவதாகவும் இரண்டாவது வேலையில் சேரவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவதாகவும் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
அமெரிக்க அரசாங்கம், வரலாறு காணாத முடக்கநிலையைச் சந்தித்து வருகிறது.
“இது வழக்கத்திற்கு மாறானது,” என்று மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் தலைவர் பிரையன் பெட்ஃபர்ட் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“எப்படி அரசாங்க முடக்கம் வழக்கத்திற்கு மாறானதோ அதைப் போன்றே கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதும் வழக்கத்திற்கு மாறானதுதான்,” என்றார் அவர்.
விமானச் சேவைகள் படிப்படியாகக் குறைக்கப்படும். உள்நாட்டு விமானச் சேவைகள், வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) 4 விழுக்காடும் நவம்பர் 11க்குள் 6 விழுக்காடும் நவம்பர் 13க்குள் 8 விழுக்காடும் குறைக்கப்படும். பின்பு நவம்பர் 14ஆம் தேதி அவை முழுமையாக 10 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அன்றாடம் 3,500 முதல் 4,000 விமானச் சேவைகள் வரை ரத்து செய்யப்படக்கூடும் என்று நம்பப்படுகிறது. மாற்றுத் திட்டமாக, மற்ற விமான நிறுவனங்களில் பயணச்சீட்டுகளை வாங்குமாறு சில விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளன.

