அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் பதிவு

1 mins read
c382219f-9a0b-4058-8511-24143d40ed4d
படம்: ஏஎஃப்பி -

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக முன்னாள் அதிபர் ஒருவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபரான டோனல்ட் டிரம்ப் (76) மீது வர்த்தகப் பதிவுகளில் மோசடி செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 34 குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடக்கிறது.

திரு டிரம்ப் 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்குமுன் ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்சுக்கு 130,000 அமெரிக்க டாலர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அதுகுறித்து அந்த நடிகை எந்த தகவலும் வெளியிடக்கூடாது என்பதற்காக அவருக்கு டிரம்ப் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

நடிகைக்குக் கொடுத்த பணத்தை வர்த்தகப் பதிவுகளில் டிரம்ப் காட்டாதது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், தம்மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்துள்ளார். இருவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

தாம் செய்த ஒரே தவறு, அமெரிக்காவை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து அதைக் காப்பாற்றியதுதான் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கங்களுக்காகத் தாம் பழிவாங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்