வாஷிங்டன்: ஈரான், அணுவாயுத விவகாரத்தில் சலுகைகளை அளித்தால் அதன்மீதான பொருளியல் தடைகளைத் தளர்த்துவதாகவும் முடக்கப்பட்ட நிதியை விடுவிப்பதாகவும் தாம் கூறியதாக வெளியான செய்தியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மறுத்துள்ளார்.
“இது உண்மையல்ல. நான் எதையும் வழங்கவில்லை,” என்று தமது ட்ரூத் சோஷல்தளத்தில் திரு டிரம்ப் பதிவிட்டார்.
அணுவாயுதத் திட்டம் குறித்து ஈரான் எடுக்கும் உறுதியான நடவடிக்கைகளுக்குப் பதிலாக ஈரான்மீதான தடைகளைத் தளர்த்தவும் முடக்கப்பட்ட நிதியை விடுவிக்கவும் தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி அக்சியோஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியைத் திரு டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
அக்சியோஸ் நிறுவனம் யார் அந்த அமெரிக்க அதிகாரிகள் என்பதை வெளிப்படுத்தவில்லை.
சிஎன்என் செய்தி நிறுவனமும் அதே தகவலை வெளியிட்டது.
இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் முன்வைத்த பரிந்துரைக்கான அமெரிக்காவின் அதிகாரபூர்வ பதிலை எதிர்பார்த்திருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) தெரிவித்தார்.
“கத்தாரின் சமரசப் பேச்சாளர்கள் யோசனைகளை முன்வைத்தனர். அதுகுறித்து கலந்துரையாடினோம். அமெரிக்கத் தரப்பிடம் அதை மீண்டும் ஒரு முறை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதையடுத்து அமெரிக்காவின் இறுதி பதில் எங்களுக்குத் தெரிவிக்கப்படும்,” என்று திரு அராக்சி கூறினார்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுக் கூட்டத்திற்காக நியூயார்க்கில் இருக்கும் ஈரானின் உயர்மட்ட அரசதந்திரி, கத்தாரின் சமரசப் பேச்சாளர்கள் நாளைக்கு அதுகுறித்து அமெரிக்காவிடம் பேசுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
“தற்போதைய கவனம் ஹோர்முஸ் நீரிணைமீது மட்டுமே உள்ளது. மறுதரப்பிடம் முன்வைத்த நிபந்தனைகள் நிறைவேறுவதைப் பொறுத்து நீரிணை மீண்டும் திறக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இம்மாதத் தொடக்கத்தில், நியூயார்க்கில் திரு அராக்சிக்கும் அமெரிக்காவின் திரு ஸ்டீவ் விட்கோஃப், திரு ஜேரட் குஷ்னர் ஆகியோருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தன்னுடைய முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்நிபந்தனையாக, ஈரான் மத்திய கிழக்கு முழுவதிலும் ஏழு நாள் போர்நிறுத்தத்தைக் கோருகிறது.
மேலும், வெளிநாடுகளில் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துகளை விடுவித்தல், நாட்டின் எண்ணெய்த் துறை மீதான தடைகளை நீக்குதல், அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவற்றையும் அது கோருகிறது.
