அலட்சியம் வேண்டாம்: அன்வார் எச்சரிக்கை

அலட்சியம் வேண்டாம்: அன்வார் எச்சரிக்கை

1 mins read
1fbb4583-a0ca-4a6e-b882-1a5199c2b858
பிகேஆர் கட்சியின் தலைவரும் மலேசியப் பிரதமருமான அன்வார் இப்ராகிம். - படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர்கள் அலட்சியமாக இருக்கவோ அற்பமான தகராறுகளில் நேரத்தை வீணடிக்கவோ கூடாது என்றும் மாறாகப் பொதுமக்களுக்கான தங்கள் பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவரும் மலேசியப் பிரதமருமான அன்வார் இப்ராகிம் நினைவூட்டியுள்ளார். சனிக்கிழமையன்று (ஏப்ரல் 18) கோத்தா பாருவில் நடைபெற்ற பிகேஆர் மாநாட்டில் பேசிய திரு அன்வார், கட்சி அமைப்பு ஒற்றுமையுடன், வரவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்குத் தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். “பொதுத் தேர்தலுக்கு நாம் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும். அற்பமான விஷயங்களைப் பற்றி விவாதிப்பதையும், நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்க மறுப்பதையும் விடுத்து, நாம் வேலை செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார். பதவிக்காகப் பிரசாரம் செய்யும்போது மட்டுமே உற்சாகமாகவும் வெளிப்படையாகவும் இருக்கும் கட்சித் தலைவர்கள், வெற்றி பெற்ற பிறகு தங்கள் கடமைகளைச் செய்வதிலோ கூட்டங்களில் கலந்துகொள்வதிலோ மெத்தனமாகிவிடுவதை அன்வார் விமர்சித்தார். “யாராவது சோர்வாக உணர்ந்தால், என்னிடம் தெரிவியுங்கள். விடுப்பு கேளுங்கள். இந்தக் கட்சி மக்களுக்கும், அவர்களுக்காக உழைக்கவும், போராடவும் விரும்புபவர்களுக்கும் சொந்தமானது,” என்று அவர் கூறினார். கிளைகளின் செயல்திறனின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்றும் சுறுசுறுப்பான மற்றும் வளர்ந்து வரும் உறுப்பினர்களைக் கொண்ட கிளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் திரு அன்வார் கூறினார். உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்காத அல்லது செயல்பாடுகளை மேற்கொள்ளாத கிளைகளுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்