பெட்டாலிங் ஜெயா: சுகாதாரச் சுற்றுலா, மருத்துவ நிபுணர்களைத் தேசிய சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற்றுகிறது என்ற கூற்றை மலேசிய மருத்துவச் சங்கம் (எம்எம்ஏ) மறுத்துள்ளது.
உண்மையான பிரச்சினை அமைப்புக்குள்ளேயே உள்ளது என்று அச்சங்கத்தின் தலைவர் டாக்டர் ஆர். திருநாவுக்கரசு கூறினார். “பொதுத்துறைதான் அவர்களை வெளியே தள்ளுகிறது. யாரும் பேச விரும்பாத, வெளிப்படையாகத் தெரியும், ஆனால் பேசப்படாத ஒரு பெரிய பிரச்சினை இதுதான்,” என்று அவர் கூறினார்.
“சுகாதாரச் சுற்றுலா மீது அந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதை எம்எம்ஏ அனுமதிக்காது,” என்று அவர் ஃப்ரி மலேசியா டுடே செய்தித்தளத்திடம் கூறினார்.
தனியார் சுகாதாரச் சேவைகளுக்குப் பொது நிதியைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி, மலேசிய மருத்துவச் சுற்றுலா ஆண்டு 2026ஐ எதிர்த்து மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) உறுப்பினர்கள் அண்மையில் நடத்திய போராட்டப் பேரணிக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.
தனியார் மருத்துவமனைகள் அதிக சம்பளம் கொடுத்து அரசு நிபுணர்களைக் கவர்ந்து செல்வதாகவும், இது அரசு மருத்துவமனைகளில் புற்றுநோயியல் மற்றும் இதயவியல் போன்ற முக்கிய துறைகளில் பற்றாக்குறைக்கு வழிவகுப்பதாகக் கடந்த டிசம்பரில் பிஎஸ்எம்மின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் கூறியிருந்தார்.
தனியார் மருத்துவமனைகள் மருத்துவர்களைக் கவர்ந்து செல்கின்றனவா என்று கேள்வி எழுப்புவது நியாயமானது என்றாலும், அவர்கள் ஏன் முதலில் வெளியேறுகிறார்கள் என்பதே ஆழமான பிரச்சினை என்று திருநாவுக்கரசு கூறினார்.
“இந்தப் பிரச்சினைக்கும் சுகாதாரச் சுற்றுலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாறாக, பொதுத்துறை அவர்களுக்கு என்ன வழங்கியுள்ளது, என்ன வழங்கவில்லை என்பதை நாம் பார்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
மூன்று முக்கிய காரணங்கள்
வரையறுக்கப்பட்ட தொழில் முன்னேற்றம், பதவி உயர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, தாங்க முடியாத பணிச்சுமைகள் ஆகிய மூன்று முக்கிய காரணிகளை அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
உயர்மட்ட மூத்த குடிமைப் பணிப் பதவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என்று திருநாவுகரசு கூறினார். “அவர்கள் எவ்வளவு திறமையானவர்களாகவோ அல்லது அர்ப்பணிப்புள்ளவர்களாகவோ இருந்தாலும், உயர் மட்டத்தில் இடமே இல்லை,” என்று அவர் கூறினார்.
“ஒத்த தகுதிகள் இருந்தபோதிலும், ஒரு சக ஊழியர் ஏன் தங்களுக்கு முன்னால் பதவி உயர்வு பெற்றார் என்பதை ஒரு நிபுணரால் புரிந்து கொள்ள முடியாதபோது, அமைப்பின் மீதான நம்பிக்கை சிதைகிறது,” என்று அவர் கூறினார். “மக்கள் வெறுமனே வேலையை விட்டு விலகுவதில்லை. அவர்கள் இனி நம்ப முடியாத அமைப்புகளை விட்டு விலகுகிறார்கள்,” என்றார் அவர்.
அதிகப்படியான பணிச்சுமை மற்றும் மோசமான வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவை பணியாளர்களைத் தக்கவைப்பதை மேலும் மோசமாக்கியுள்ளன. தனியார் மருத்துவமனைகளின் விரைவான விரிவாக்கம், பொதுத்துறையிலிருந்து அனுபவம் வாய்ந்த நிபுணர்களை வெளியேற்றிவிடும் என்று எச்சரித்து, டாக்டர் திருநாவுக்கரசு மேலும் கவலை தெரிவித்தார்.
சுகாதாரச் சுற்றுலா பொருளியலுக்கு ஒரு முக்கியப் பங்களிப்பாகத் தொடர்கிறது என்றும், அது அந்நிய வருவாயைக் கொண்டுவருவதாலும், வேலைவாய்ப்புகளை ஆதரிப்பதாலும், மலேசியாவை ஒரு வட்டாரச் சுகாதார மையமாக நிலைநிறுத்த உதவியிருப்பதாலும் சுகாதாரச் சுற்றுலாவின் பங்களிப்பைக் குறைக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

